கோலாலம்பூர் – அபு சாயாப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாலுமிகள் நால்வர், பின்னர் விடுதலை செய்யப்பட்டதற்காக கொடுக்கப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் தொகை பிணைப் பணம் அல்ல, இஸ்லாமிய நலக் குழுக்களுக்கான நன்கொடை என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, அந்தப் பணத்தைப் பெற்றது எந்த இயக்கம் என்பதை அறிவிக்குமாறு லிம் கிட் சியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அபு சாயாப் தீவிரவாதக் கும்பலுக்காக, சில இஸ்லாமிய நலக் குழுக்கள் இவ்வாறு பிணைப் பணம் பெறும் நோக்கில், முன் இருந்து செயல்படுகின்றனவா என்றும் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேரடியாக கடத்தலுக்காக பிணைப் பணம் பெறுவதற்கு பதிலாக, இவ்வாறு இஸ்லாமிய நல இயக்கங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் பணம் பெற்று, அந்தப் பணம் அபு சாயாப்பின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியையும் லிம் கிட் சியாங் எழுப்பியுள்ளார்.
இரட்டை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும் நிலையில், மக்களுக்கு இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கத்தின் மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிட் சியாங் கூறியுள்ளார்.