இலண்டன் – நேற்று சுடப்பட்டு மாண்ட பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸ் மரணத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதா இல்லையா என்பது குறித்த பிரச்சாரங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கணவர் பிரெண்டனுடன் மரணமடைந்த ஜோ கோக்ஸ்…
பிரிட்டனின் ஆளுமைக்கு உட்பட்ட கிப்ரால்டார் தீவில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக நடத்தப்படவிருந்த ஒரு மாபெரும் பேரணியில் உரையாற்றவிருந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தனது வருகையை ரத்து செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மற்ற கட்சியினரும், தரப்பினரும், ஜோ கோக்ஸ் மரணத்திற்கு மரியாதை தெரிவிக்கும் நோக்கில் தங்களின் பிரச்சாரங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
41 வயதே ஆன – பல திறமைகள் கொண்டவராகக் கூறப்படும் ஜோ கோக்ஸ் (படம்) மரணம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதா இல்லையா என்ற வாக்கெடுப்பை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதி இதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.