Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: முத்தின கத்திரிக்கா – கதைக்கு உதவாது, காமெடிக்கு ஓகே!

திரைவிமர்சனம்: முத்தின கத்திரிக்கா – கதைக்கு உதவாது, காமெடிக்கு ஓகே!

1190
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட் ராகவன், தனது குருநாதரையே ஹீரோவாக்கி, குருநாதரின் மனைவி குஷ்புவையே தயாரிப்பாளருமாக்கி சந்தைக்கு இழுத்து வந்திருக்கும் படம் ‘முத்தின கத்திரிக்கா’.

‘முத்தின கத்திரிக்கா’ என்றொரு வித்தியாசமான தலைப்பு, கதாநாயகி பூனம் பாஜ்வாவின் கவர்ச்சிப் போஸ்டர்கள், படம் பாக்யராஜ் பாணியில் இருக்கும்  என்ற அறிவிப்புகள் என பயன்படுத்தப்பட்ட வியாபார உத்திகள் சரியாக வேலை செய்து, இது அப்படிப்பட்ட படமா இருக்குமோ, இப்படிப்பட்ட படமா இருக்குமோ என்று ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

muthina-kathirikaஆனால் உண்மையில் இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் தான். பிஜூ மேனன் நடிப்பில் 2014-ம் ஆண்டு, ‘வெள்ளிமூங்கா’ என்ற பெயரில் வெளியாகி வசூலில் திடீர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனை அப்படியே தமிழில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மசாலா பூசி மாற்றியிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

சுந்தர் சி, பூனம் பாஜ்வா, கிரண், ரவி மரியா, சதீஸ்,  சிங்கம் புலி, விடிவி கணேஷ், ஸ்ரீமன், சுமித்ரா என தெரிந்த முகங்கள் பலர் இப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கதைச் சுருக்கம்

அரசியலில் போஸ்டர் ஒட்டியே காலத்தை ஓட்டி வந்த பரம்பரையைச் சேர்ந்த சுந்தர் சி, தனது தாத்தா, அப்பா போல்  ஏமாளியாக இருக்கக் கூடாது என்று நினைத்து சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து அதற்குத் தானே மாநிலச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

கட்சி நடத்தவே காசு இல்லாவிட்டாலும் கூட விடா முயற்சியாக பல கோல் மால் வேலைகளைச் செய்து தன்னை ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்கிறார்.

இப்படி இருக்க அதே ஊரில் அவருக்கு எதிராக விடிவி கணேஷ் ஒரு கட்சியிலும், சிங்கம் புலி ஒரு கட்சியிலும் இருந்து கொண்டு சுந்தர் சி-யை வீழ்த்துவதற்கு சதி வேலைகளைச் செய்கிறார்கள்.

அதோடு, சுந்தர்.சி 40 வயதாகியும் கல்யாணமே ஆகாமல் முத்தின கத்திரிக்காயாய் இருப்பதால், அவரது தாயான சுமித்ரா அவருக்கு பெண் தேடுகிறார். எந்தப் பெண்ணும் அவருக்கு அமையாமல் போகவே அது ஒரு புறம் சுந்தர் சி-யை வாட்டுகிறது.

Sundar cஇந்நிலையில், பூனம் பாஜ்வாவைச் சந்திக்கும் சுந்தர் சி காதலில் விழுகிறார். ஆனால் அவர்களின் காதலுக்கும் ஒரு தடை வருகிறது. அதனால் மிகுந்த அவமானப்படுகிறார்.

ஒருநாள் நானும் அமைச்சர் ஆவேன் என்று சவால் விடும் சுந்தர் சி, தனது லட்சியத்தில் ஜெயித்தாரா? பூனம் பாஜ்வாவை திருமணம் செய்தாரா என்பதே மீதிக் கதை.

ரசித்தவை

படத்தில் ரசிக்கும் இடங்கள் என்றால், சுந்தர் சி, சதீஸ், விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி கூட்டணியின் நகைச்சுவைக் காட்சிகள் தான். ஆனால் அதில் பல காட்சிகளில் பேசும் வசனங்களில் இரட்டை அர்த்தங்கள் கலந்திருப்பது சற்று நெருடல்.

இவர்களின் கூட்டணிக்கு இடையில் யோகி பாபு சில காட்சிகளில் வந்து ரசிக்க வைக்கின்றார்.

படத்தில் ஒட்டுமொத்த காமெடி நடிகர்களும் சுந்தர் சியை மாறி மாறி கலாய்க்கும் காட்சிகள் இருந்தாலும் கூட, சுந்தர் சி-யின் இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கின்றது.

Muthina-Kathirikaiபூனம் பாஜ்வாவுக்கு கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் நடிப்பு காட்டும் கதாப்பாத்திரம். மற்றபடி படத்தில் அவருக்கு சொல்லும் படியாக வேறு ஒன்றும் இல்லை.

“ஒரு வயசுக்கு மேல நம்மள விட வயசுக் குறைவான பொண்ணு பின்னால போறது, நாய் தொரத்தும் போது ஜட்டி அவுற மாதிரி தான். பார்த்துக்கிட்டு ஒன்னும் செய்யாமலும் இருக்க முடியாது. நின்னு அதைப் போடவும் முடியாது” இப்படியாக படத்தில்  திடீரென சிரிக்கவும் வசனங்கள் உள்ளன.

சுந்தர் சி-க்கும், சுமித்ராவுக்கு இடையிலான அம்மா – மகன் பாசத்தில் சிந்திக்க வைக்க சில காட்சிகளும் உள்ளன.

பானு முருகனின் ஒளிப்பதிவில் கதைக்கு ஏற்றவாறு காட்சிகளில் எதார்த்தம் நிறைந்துள்ளது. கிராமப்புறம், தெப்பக்குளம் போன்ற காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

சித்தார்த் விபினின் பின்னணி இசை சுமார் இரகம். பாடல்களைக் காட்சிகளோடு பார்க்கும் போது சிறப்பாக வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

இரண்டாம் பாதியில் கிளைமாக்சுக்கு சில நிமிடங்களுக்கு முன் வரும் தேர்தல் காட்சிகள் தான் அதுவரை செல்போனை நோண்டிக் கொண்டிருந்த ரசிகர்களை நிமிர்ந்து உட்காரச் செய்கின்றது.

சொதப்பல்கள்

படத்தில் முதல் பாதி பல படங்களில் பார்த்துப் பழகிப் போன காட்சிகள் என்பதால், இடைவேளைக்கு முன்பாகவே ரசிகர்களை கதைக்குள் ஈர்க்கத் தவறி விடுகின்றது திரைக்கதை அமைப்பு. இடைவேளை வரை இழுவையோ இழுவை..

கடைசி அரை மணி நேரக் காட்சிகள் தான் விறுவிறுப்பை கூட்டி ரசிகர்களை மீண்டும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.

பட்டாசு அட்டைப் பெட்டிகளை வைத்து விடிவி கணேசை முட்டாளாக்குவது, பிச்சைக்காரர்களை வைத்து தர்ணா நடத்துவது, பூனம் பாஜ்வாவை காதலிக்க வைக்க செல்போன் மூலம் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி அவரது வயதைத் தெரிந்து கொள்வது போன்ற ஐடியாக்கள் உண்மையில் முத்தின கத்திரிக்காய் போல் தான். இயக்குநரின் மூளைக்குள் எப்போதோ தோன்றி முத்திப் போய் இப்போது தான் சந்தைக்கு வருகிறது போல் தெரிகிறது.

அதுமட்டுமா? சாராய பாட்டிலில் தேநீரை ஊற்றிக் கொடுத்து ஏமாற்றுவது, கவரில் காசு இல்லாமல் விநியோகம் செய்து பத்திரிக்கையாளர்களைக் கூட்டுவது, நடிகர் வைபவை மாப்பிள்ளையாக நடிக்க வைத்து ஹீரோ தனது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது.. அப்பப்பா.. மிடில..

அதை விட சகிக்க முடியாத கொடுமை சுந்தர் சி – கிரண் ப்ளாஷ்பேக் காதலும், படத்தில் கடைசி வரை அதை வைத்து நகைச்சுவை செய்திருப்பதும் தான்.

Muthina-kathirika-poonam-bajva-1280x640ஒரு காட்சியில் பூனம் சொல்கிறார், “அம்மா என்ன? உன் முன்னாள் காதலன்கிறதுனால அவருக்கு சப்போர்ட் பண்றியா?”

இன்னொரு காட்சியில் சதீஸ் சொல்கிறார், “ஏன் தலைவரே.. ரெண்டுல யாருக்கு கை காட்டுறீங்க.. ஆனா பொண்ணவிட அம்மா சூப்பரா இருக்கு”

இப்படியாகப் பல காட்சிகள் குடும்பத்தோடு படம் பார்க்கப் போகிறவர்களை நெளிய வைக்கலாம்.

மொத்தத்தில், மலையாள ரீமேக்கான ‘முத்தின கத்திரிக்கா’ – தமிழில் கதைக்கு உதவவில்லை.. காமெடிக்கு ஏதோ ஒரு வகையில் உதவியிருக்கிறது..

-ஃபீனிக்ஸ்தாசன்