கோலாலம்பூர் – மலேசிய இந்தியத் தூதரகம் ஏற்பாட்டில், தலைநகர் பிரிக்பீல்ட்சிலுள்ள இந்தியக் கலாச்சார மையத்தில் நேற்று நேதாஜி சுபாஸ் சந்திர போசின் வெண்கலத் திருவுருவச் சிலை திறப்பு விழா கண்டது.
மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீகே.ஆர் சோமசுந்தரம், முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஆகிய முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள, அரங்கம் நிறைந்த பொதுமக்கள் முன்னிலையில், இவ்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில், சிறப்பம்சமாக, நேதாஜி சுபாஸ் சந்திர போசின் இந்திய தேசிய இராணுவப்படையில் (ஐஎன்ஏஏ) இணைந்து பணியாற்றிய மலேசியாவைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட மூத்த படை வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
அவர்களில் ராணி ஜான்சி படையில் பணியாற்றிய ராசம்மா பூபாலன், மீனாட்சி பெருமாள் (வயது 90) , அஞ்சலை பொன்னுசாமி (வயது 98), ஐஎன்ஏ படை வீரரான டான்ஸ்ரீ கே.ஆர் சோமசுந்தரம் ஆகியோர் நேதாஜி அவர்களுடன் இணைந்து சேவையாற்றியது குறித்து தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்தி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிப் பிறகு மலேசிய இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, செய்தியாளர்களின் பேசுகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரிந்து போது, நேதாஜியின் பங்களிப்பின் நினைவாக மலேசியாவில் இயங்கும் இந்தியக் கலாச்சார மையம் இனி அவரது பெயரால் அழைக்கப்படும் என அறிவித்ததாகத் தெரிவித்தார்.
டி.எஸ்.திருமூர்த்தி அவர்களின் முழுப் பேட்டியை கீழ்காணும் யூடியூப் இணைப்பின் வழியாகக் காணலாம்:-