கோலாலம்பூர் – நேற்று தலைநகர் செராஸ் பூப்பந்து விளையாட்டரங்கில் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உலக யோகா தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், யோகாவின் சிறப்புகளை உணர்ந்து அதனை சில உடல்நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சையாக அளிக்கும் முயற்சிகள் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
உலக யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல இன மக்களுடன் சுப்ரா…
பல்வேறு நலன்களைக் கொண்டுவரும் ஆற்றல் வாய்ந்த யோகா பயிற்சிகள் தற்போது மலேசியாவில் இன, மத வேறுபாடின்றி பலராலும் பின்பற்றப்படுவதாகவும், நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு போதனைகள் நடத்தப்படுவதாகவும் சுப்ரா தெரிவித்தார்.
யோகா குறித்த விழிப்புணர்வுக் கல்வி நிறைய அளவில் நடைபெற்று வரும் வேளையில், சில மருத்துவமனைகளில் யோகாவைப் பயன்படுத்தி உடற்பயிற்சி மையங்களில், சில உடல் குறைபாடுகளைச் சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சருமான சுப்ரா தெரிவித்தார்.
யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியுடன் சுப்ரா….
போர்ட்டிக்சனில் உள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுப்ரா தனது உரையில் குறிப்பிட்டார். யோகா, ஆயுர்வேதம், போன்ற பாரம்பரிய சிகிச்சை முறைகளை நவீன சிகிச்சை முறைகளுடன் இணைப்பதன் மூலம், நோயாளிகளுக்கு சிறந்த பலன்களைக் கொண்டுவர முடியும் என்றும் அவர் கருத்துரைத்தார்.
யோகா மதம் சம்பந்தமானது என்பது குறித்த சந்தேகம் தேவையில்லை என்றும், இது முழுக்க முழுக்க உடல்ரீதியானது, உடலை வலுவாக்கும் ஆற்றல் கொண்டது என்பதோடு, தியானம் போன்றவை மூலம் மனதைத் தூய்மையாக்கும் தெளிவாக்கும் தன்மை கொண்டது என்றும் சுப்ரா விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியும் கலந்து கொண்டார்.
உலக யோகா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது, தியானத்தில் அமர்ந்திருக்கும், இந்தியத் தூதர் திருமூர்த்தி, டாக்டர் சுப்ரா…