இலண்டன் – ஐரோப்பிய யூனியன் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளே இருப்பதா – வெளியே செல்வதா – என்ற கேள்வியோடு, பொதுவாக்கெடுப்புக்கு பிரிட்டன் மக்கள் வாக்குச் சாவடிகளை நோக்கிச் செல்லப் போகும் நாள் ஜூன் 23! நாளை மறுநாள்!
பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகக் கட்டிடத்தின் முன் பட்டொளி வீசிப் பறக்கும் உறுப்பிய நாடுகளின் கொடிகள்… பிரிட்டன் கொடி இனியும் பறக்குமா அல்லது இறங்குமா என்பது ஜூன் 23இல் தெரிந்து விடும்….
இந்த வாக்கெடுப்பின் பின்னணி என்ன? விளைவுகள் என்ன? என்பது குறித்த சில சுவைத் தகவல்கள்:-
- 28 நாடுகள் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றன. இவற்றில் 19 நாடுகள் யூரோ என்ற பொதுவான நாணயப் பரிமாற்றத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. மற்ற நாடுகள், உதாரணமாக, பிரிட்டன் தங்களின் சொந்த நாணயத்தைப் பயன்படுத்துகின்றன.
- ஐரோப்பிய யூனியனிலுள்ள ஜெர்மனி அதன் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு. பிரிட்டன் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாகும்.
- எல்லா அம்சங்களிலும் ஜனநாயகப் பண்பாடுகளோடு நடக்கும் நாடு பிரிட்டன். அந்த வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பியம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்க, கடந்த பொதுத் தேர்தலின்போது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா இல்லையா என்ற பொது வாக்கெடுப்பு மக்களிடையே நடத்தப்படும் என அறிவித்தார் பிரதமர் டேவிட் கெமரூன் (படம்).
- அதன்படி ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா இல்லையா என்ற கேள்விக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
- பிரிட்டன் வெளியேற வேண்டும் என மக்கள் முடிவு செய்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2018இல் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான முன் அறிவிப்பு கொடுக்கப்படும்.
- 2019-2020ஆம் ஆண்டுகளில் பிரிட்டன் தனித்து இயங்கத் தொடங்கும்.
- பிரிட்டன் வெளியேற்றத்தால், ஐரோப்பிய யூனியனின் எதிர்காலமும், வளமும் மங்கத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- மாறாக, பிரிட்டன் தனித்த நாடாக, சுதந்திரமான பொருளாதாரக் கொள்கைகளோடு, தனது எதிர்காலத்தை தானே நிர்ணயித்துக் கொள்ள முடியும் – ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்கள், கெடுபிடிகள் இல்லாமல் தனித்து நடைபோட முடியும்.
- இருப்பினும், மிகப் பெரிய ஐரோப்பிய சந்தையிலிருந்து விலகுவதால், அதன் காரணமாக, பிரிட்டன் பெருத்த பொருளாதார சரிவுகளைச் சந்திக்கும் என்ற ஆரூடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-செல்லியல் தொகுப்பு