சென்னை – நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் உறவினர்கள், தங்கள் வீட்டுப் பெண்ணை இழந்து வாடிக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில், தகவல் ஊடகங்கள் தவறான சித்தரிப்புகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குற்றவாளியைக் கண்டுபிடிக்க அனைத்துத் தகவல் ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் தகவல் தெரிந்தால், யாராவது முன்வந்து காவல் துறைக்கு தெரிவித்தால், கொலைகாரனைக் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் எனத் தெரிவித்த கோவிந்தராஜன், மாறாக, ஜாதி, மதம், அரசியல் பேசி கொலைக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
“உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். நாங்கள் மனம் நொந்திருக்கும் நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம். எங்களுக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் காவல் துறைக்குத் தந்திருக்கின்றோம்” என்றும் கோவிந்தராஜன் விளக்கியுள்ளார்.
இதற்கிடையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் காணொளிக் காட்சிகள் இரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் புகைப்படக் கருவிகளின் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கொலையாளியின் அடையாளங்களைக் காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.