சென்னை – பேஸ்புக்கில் தனது மார்பிங் செய்யப்பட்ட படத்தைப் பார்த்த வினுபிரியா (வயது 22) என்ற பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்ற பொறியியலாளர் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கொலை செய்யப்பட்ட செய்தியும் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வேளையில், வினுபிரியாவின் தற்கொலை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இடங்கணசாலையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் வினுபிரியா (22). பிஎஸ்சி படித்துள்ள இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலை குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், வினுபிரியாவின் புகைப்படம் உருவமாற்றம் (மார்ஃபிங்) செய்யயப்பட்டு மற்றொரு பெண்ணின் உருவத்துடன் ஆபாசமாக இருப்பது போல பேஸ்புக் பக்கம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த வினுபிரியாவின் உறவினர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த வினுபிரியா இது குறித்து மகுடஞ்சாவடி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். எனினும் நடவடிக்கை எடுக்கத் தாமதமாகவே மன உளைச்சலில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
இதனிடையே, வினுபிரியாவின் புகைப்படத்தை அதிலிருந்து நீக்குவதற்கு காவல்துறைத் தரப்பில் லஞ்சம் கேட்டதாகவும், அதனால் தான் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதமானதாகவும் வினுபிரியாவின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.