கோலாலம்பூர் – கடந்த வாரம் தான்சானியாவின் பெம்பா தீவு அருகே கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கை, போயிங் 777 இரக விமானத்தினுடையது தான் என தான்சானியான் வான் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தான்சானியா உள்நாட்டுப் போக்குவரத்துத் துறை பொது இயக்குநர் ஹம்சா ஜோஹாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தின் இறக்கையின் ஒருபகுதியை ஆய்வு செய்த நிபுணர்கள் அது போயிங் 777 இரக விமானத்தின் பாகம் தான் எனக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“எனினும், அது மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்370-ன் பாகம் தான் என்று இப்போதே சொல்லி விட முடியாது.” என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு செல்பேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தான்சானியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பிரதேசம் முழுவதிலும், போயிங் இரக விமானம் மாயமானதாக எந்த ஒருபதிவும் இல்லை என்பதையும் ஹம்சா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது குறித்து மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.