கோலாலம்பூர் – இந்தியாவின் புதிய – 29வது – மாநிலம் தெலுங்கானா. ஆந்திராவிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்து சென்ற தெலுங்கானா தற்போது பல முனைகளிலும் தொழில் துறைகளை ஈர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களையும், கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றது.
தெலுங்கானா அமைச்சர் இராமராவ் மலேசிய இந்திய வர்த்தக மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வர்த்தக கலந்துரையாடலில் உரையாற்றுகின்றார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலதிபர்களையும், தொழில் துறை வல்லுநர்களையும் ஈர்க்க முழு மூச்சுடன் முனைப்புடன் செயல்பட்டு வரும் தெலுங்கானா மாநிலத்தின் அமைச்சரான கே.டி.இராமராவ் அண்மையில் மலேசியாவுக்கும் வருகை புரிந்திருந்தார்.
கே.டி.இராமராவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகள்
தெலுங்கானா அமைச்சரவையில் தொழில் நுட்பம், தொழில் துறை, சுரங்கத் தொழில், வெளிநாட்டு இந்தியர் விவகாரம், நகர்ப்புற மேம்பாடு, ஆகிய முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்து வருபவர் இராமராவ்.
தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு, உண்ணாவிரதப் போராட்டம் என பல முனைகளில் போராடி இறுதியில் தெலுங்கானா மாநிலம் மலர்வதற்கு காரணகர்த்தாவாக இருந்தவரும், அந்த புதிய மாநிலத்தின் இன்றைய முதலமைச்சருமான சந்திரசேகர ராவ்வின் மகன்தான் அமைச்சர் இராமராவ்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி தலைநகரில் உள்ள ஒரு பிரபல தங்கும் விடுதியில், மலேசிய, இந்திய வர்த்தக மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலேசிய வணிகர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் இராமராவ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சுமார் 20 நிமிடங்கள் தெளிவான, சரளமான ஆங்கிலத்தில் தெலுங்கானாவின் இன்றைய நிலவரங்கள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் வந்திருந்த தொழில் துறை வல்லுநர்களிடம் விளக்கினார் ராமராவ்.
இந்தியாவின் மிகப் பெரிய வளர்ச்சி பெற்ற முன்னணி நகர்களில் ஒன்றான ஹைதராபாத்தைத் தலைநகரமாகக் கொண்டிருக்கும் மாநிலம் என்பதோடு, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஹைதராபாத் வெகு வேகமாக முன்னேறி வருகின்றது என்றும் உலகின் முன்னணி கணினித் துறை நிறுவனங்கள் யாவும் தங்களின் வட்டாரத் தலைமையகங்களை ஹைதராபாத்தில் நிறுவியுள்ளன என்றும் இராமராவ் தனது உரையில் தெரிவித்தார்.
தெலுங்கானா அமைச்சர் இராமராவுக்கு நினைவுப் பரிசு வழங்குகின்றார் மலேசிய இந்திய வர்த்தக மன்றத்தின் தலைவர் டத்தோ குணா சிற்றம்பலம்…
மேலும் தெலுங்கானா மாநிலத்தில் தொழில்கள் தொடங்கப்பட பல்வேறு கவர்ச்சிகரமான, சலுகைகள், வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் இராமராவ் குறிப்பிட்டார்.
தெலுங்கானாவிற்கு வருகை தந்து அந்த மாநிலத்தின் வளர்ச்சி நிலவரங்களை நேரடியாகப் பார்வையிடுமாறும் இராமராவ் கேட்டுக்கொண்டார். தொழில்களில் ஈடுபட விரும்புபவர்கள் தனது அமைச்சைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
டத்தோ குணா சிற்றம்பலம் வரவேற்புரை நிகழ்த்துகின்றார்…
மலேசிய இந்திய வர்த்தக மன்றத்தின் சார்பில் (Malaysian Indian Business Council) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு அம்மன்றத்தின் தலைவர் டத்தோ குணா சிற்றம்பலம் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய குணா சிற்றம்பலம், மலேசிய நிறுவனங்கள் முதலீடுகள் செய்வது, கட்டுமானத் திட்டங்களில் பங்கு பெறுவது போன்ற நோக்கங்களுடன் இந்தியாவில் காலடி வைத்தபோது, அவர்கள் சென்ற முதல் நகரங்களுள் ஒன்று இன்றைய தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் என்று தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் குறித்த கூடுதல் விவரங்கள் பெற விரும்புவோர் கீழ்க்காணும் இணைய அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்:
min_prit@telangana.gov.in