கோலாலம்பூர் – சரவாக் ரிப்போர்ட் எனப்படும் இணையத் தளத்தில், அரசாங்கத்தால் இரகசிய ஆவணம் என வகைப்படுத்தப்பட்ட, 1எம்டிபி நிறுவனத்தின் தேசியக் கணக்காய்வாளரின் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த அறிக்கை உண்மையான அறிக்கைதானா, என்பதை காவல் துறை ஆராய்ந்து வருகின்றது என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
1 எம்டிபி மீதன அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை இரகசியமானது என்று அரசாங்கம் அதனை இரகசிய ஆவணம் என வகைப்படுத்தியுள்ளதால், அந்த அறிக்கையை இதுவரை வெளியிட முடியவில்லை.
அரசாங்க அதிகாரபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் அந்த அறிக்கை வருவதால், அதனை அந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பல சமூக இயக்கங்களும் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகின்றன.
இந்நிலையில்தான், சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் அந்த அறிக்கையை கடந்த நான்கு நாட்களாக பகுதி பகுதியாக வெளியிட்டு வருகின்றது. பல பரபரப்பான தகவல்களை அந்த அறிக்கை கொண்டுள்ளது.
இருப்பினும் சரவாக் ரிப்போர்ட் இணையத்தளம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளில் உள்ளவர்கள் இந்த இணையத்தளத்தின் மூலம் அந்த அறிக்கைகளைப் பார்க்கலாம் என்றாலும், மலேசியர்கள் பார்க்க முடியாது.