ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் குளுகோர் வட்டாரத்தில் உள்ள ஓர் இந்து ஆலயத்தில் உள்ள இந்து தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்) தெரிவித்துள்ளார்.
துங்கு குடின் பகுதியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் நுழைவாயில்கள் உடைக்கப்பட்டிருப்பதை அந்த ஆலயத்தின் குருக்கள் இன்று காலை 5.30 மணியளவில் கண்டனர்.
70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், சிவலிங்கம், மற்றும் பிரதான வழிபாட்டுச் சிலையான முனீஸ்வரர் ஆகிய 3 தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் கண்டனர்.
இந்த சிலைகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கும், ஆலயத்தை சீரமைப்பதற்கும் சுமார் ஒரு இலட்சம் ரிங்கிட் வரை செலவாகலாம் என மதிப்பிட்டிருக்கும் துணை முதல்வர் இராமசாமி, “4 மாதங்களில் பினாங்கில் மட்டும் 4 இந்து சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது ஏன்? பினாங்கு மாநில அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதற்கா? அல்லது இது ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய இயக்கங்களின் தாக்குதலா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.