Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “சுல்தான்” – சல்மான் உடலுக்கென செதுக்கப்பட்ட கதாபாத்திரம்!

திரைவிமர்சனம்: “சுல்தான்” – சல்மான் உடலுக்கென செதுக்கப்பட்ட கதாபாத்திரம்!

1110
0
SHARE
Ad

Sultan-salman-வரிசையாக அனைத்து அம்சங்களிலும் சிறப்பான படங்களையே தந்து வரும் சல்மான் கானுக்கு மகுடம் சூட்டியிருக்கும் மற்றொரு படம் ‘சுல்தான்’. 50 வயதிலும் கட்டுக் குலையாத சல்மான் கானின் உடற்கட்டழகைச் சரியான முறையில் பயன்படுத்தியிருப்பது படத்தின் சிறப்பு.

பல படங்களில் கவர்ச்சிக்காக சட்டையைக் கழற்றிக் காட்டும் சல்மானுக்கு இந்தப் படத்தில் சட்டையில்லாமலேயே படம் முழுக்க நடிக்கவேண்டிய மல்யுத்த வீரர் கதாபாத்திரம்.

sultan-salman-training-சுல்தான் படத்திற்காக கடுமையாகப் பயிற்சிகள் மேற்கொண்டு உடலைச் செதுக்கிய சல்மான் அதை வர்ணிக்கப் போய் – பெண்கள் அமைப்புகளிடம் வகையாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அதுவே, படத்திற்கு ஒரு வகையில் விளம்பரமாகவும் அமைந்து விட்டது…

#TamilSchoolmychoice

அந்தக் காலத்திலிருந்து, ஹாலிவுட்டின் சில்வஸ்டர் ஸ்டால்லோன் பாணியில், சாதாரணப் பின்னணியைக் கொண்ட மனிதன் ஒரு விளையாட்டில் ஈடுபட்டு, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் படிப்படியாக முன்னேறி சாதனைகள் படைக்கும் வழக்கமான கதைதான் என்றாலும், சுல்தான் வித்தியாசப்பட்டு நிற்பது, அதனை மண்ணின் மணம் கமழ, இந்தியாவின் ஹரியானா மாநிலத்துக்கே உரிய பண்பாட்டுக் கலாச்சார அம்சங்களோடு, இணைத்து, இழைத்து செதுக்கப்பட்டிருக்கும் காரணத்தினால்தான்!

ஈத் பெருநாளை முன்னிட்டு இந்தியாவில் வெளியான சுல்தான் முதல் மூன்று நாட்களிலேயே, 105 கோடி ரூபாய் வசூலித்து 100 கோடி வசூல்படங்களின் வரிசையில் சேர்ந்து விட்டது என்பதை வைத்து, சல்மான் கானின் நட்சத்திர மதிப்பையும், படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பையும், தெரிந்து கொள்ளலாம்.

கதையும் கதாபாத்திரங்களும்…

Sultan-Movie-salman-anushkaமல்யுத்த வீரனுக்கும், மல்யுத்த வீராங்கனைக்கும் காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தால்….அதனால் ஏற்படும் சில பிரச்சனைகளும் சுல்தான் படத்தின் இன்னொரு கோணம்…

ஹரியானா மாநில மண்ணோடு கலந்து விட்ட ஒரு கலாச்சாரம் திறந்த வெளி அரங்குகளில் நடக்கும் மல்யுத்தம். அதுதான் படத்தின் மைய இழை.

சாதாரண, கேபிள் தொலைக்காட்சி பொருத்தும் வேலையைச் செய்து கொண்டு ஊரில் சுற்றிக் கொண்டிருக்கும், சுல்தான் என்ற பெயர் கொண்ட சல்மான், உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது அறுபடும் பட்டத்தை விரட்டிப் பிடிப்பதில் வேகமும், சுறுசுறுப்பும் காட்டும் கில்லாடி.

ஒருமுறை கதாநாயகி அர்ஃபாவை (அனுஷ்கா ஷர்மா) கண்டு காதலில் விழும் சுல்தான் அவரோடு பழக ஆரம்பிக்கின்றார். அனுஷ்கா ஒரு மல்யுத்த வீராங்கனை. அவர் தந்தையும் மல்யுத்த பயிற்சியாளர். அனுஷ்காவுக்கு ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வாங்குவதுதான் கனவு.

sultan-anushka-wrestlingமல்யுத்த வீராங்கனையாக அனுஷ்கா ஷர்மா…

அதனால், எந்த ஒரு இலக்கும் இல்லாமல் ஊர் சுற்றும் சல்மானை மட்டம் தட்டி, அவருடைய காதலைப் புறக்கணிக்கின்றார் அனுஷ்கா. அதனையே சவாலாகக் கொண்டு, அவரது தந்தையின் மல்யுத்த பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து கடுமையாகப் பயிற்சி பெற்று மாநில மல்யுத்த போட்டியில் வெற்றி வாகை சூடுகின்றார் சல்மான்.

இப்படிப் போகும், சல்மான் வாழ்க்கையில், அவர் காதலில் பின்னர் வென்று அனுஷ்காவைக் கைப்பிடித்தாலும், திருமணத்திற்குப் பின்னர் நிகழும் ஒரு சோகத்தால், கருத்து வேறுபாடால், அவர்கள் பிரிய நேரிடுகின்றது.

சல்மான் மல்யுத்தத்தைத் துறந்து தனிமையில் வாடிக் கொண்டிருக்க, அவரை அணுகுகின்றது ஒரு தொலைக்காட்சி நிலையம். மண்ணின் மைந்தன் ஒருவனை, மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய விளையாட்டின் மூலம் புகழ்பெற்றவனை, மீண்டும் சண்டை அரங்கில் கொண்டு வந்து முன் நிறுத்துவதன் மூலம், இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்தால், சரிந்து கொண்டிருக்கும் இரசிகர்களின் எண்ணிக்கையைக் கூட்டலாம் என்ற கணக்கோடு, சல்மானை அணுகுகின்றது தொலைக்காட்சி நிலையம்.

sultan-salman-fat bodyதொப்பை விழுந்து விட்ட இந்த உடலோடு மீண்டும் கோதாவில் ஜொலிக்க முடியுமா என சல்மான் நடத்தும் போராட்டம்தான் சுல்தான் படம்…

வயது தாண்டிய நிலையில், குலைந்து, தளர்ந்து போன உடற்கட்டோடு இருக்கும் சல்மான், ஆளை அடித்து வீழ்த்தும் நவீன சண்டைப் போட்டியில் இறங்க முற்படுகின்றார், தான் மல்யுத்த விளையாட்டில் தொலைத்ததை மீண்டும் மீட்டெடுக்க!

அவர் அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? அனுஷ்காவோடு மீண்டும் இணைந்தாரா என்பதுதான் படம்!

சல்மான் கான் தனி ஒருவனாகத் தாங்கிப் பிடிக்கின்றார்

படம் முழுவதும் சல்மான் என்ற தனிமனித நடிகரின் தோள்களில் – மன்னிக்கவும், உடம்பில் சுமத்தப்பட்டிருக்கின்றது.

அதற்கேற்ப, அவரது உடற்கட்டின் ஒவ்வொரு பாகமும் நடித்திருக்கின்றது. 50வது வயதிலும், தொழில் பக்தியோடு, தான் வாங்கும் காசுக்கு ஏற்ப, இரசிகனை ஏமாற்றக் கூடாது என கடுமையாக உழைத்திருக்கின்றார் சல்மான். மண்ணில் புரண்டு எழுகின்றார். அடி வாங்குகின்றார். உண்மையிலேயே சல்மான் திரைப்பட வரலாற்றில் அவரை புரட்டிப் புரட்டி எடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும்.

sultan-salman-wrestling-ringதூள் மண்ணைப் பரப்பி, தரையாக்கி அதில் மல்யுத்தப் போட்டிகள் நடத்தும் ஹரியானா கலாச்சாரத்தைப் படம் பிடித்திருக்கின்றது சுல்தான். தான் புரண்டு போட்டியிட்ட மண்ணையே, பத்திரமாகப் பையில் கொண்டு வந்து, கைகளில் தடவிக் கொண்டு படத்தின் உச்சகட்ட சண்டைகளில் அரங்கில் நுழைவார் சல்மான்…

ஹரியானா மாநிலத்துக்கே உரிய உடல் மொழி, பேச்சு மொழி, நடை, உடை பாவனைகள், பழக்க வழக்கங்கள் என அத்தனையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதுதான் படத்தின் சிறப்பு. மல்யுத்தம், சண்டைகள் நடக்கும் விளையாட்டு அரங்கக் காட்சிகள் தவிர்த்து, மற்றபடி ஹரியானா மாநிலத்திலேயே நாமும் வாழ்ந்து விட்டு வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார் இயக்குநர் அலி அபாஸ் சபார்.

இறுதிக்காட்சிகளில் பயிற்சியாளராக வரும் ரண்டீப் ஹூடா தனது அற்புத நடிப்பை சல்மானுக்கு ஈடாக – தான் வரும் சில காட்சிகளிலேயே வழங்கியிருக்கின்றார்.

கவரும் அனுஷ்கா…

அனுஷ்காவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லியின் காதல் தோழிக்கு விளையாட்டைப் பற்றி சொல்லித் தரவா வேண்டும்?

மல்யுத்த வீராங்கனையாக களத்தில் புரண்டு விளையாடும் அவர், காதலிலும், பின்னர் சல்மான் மீது காட்டும் கடுப்பிலும் மனதைக் கவர்கின்றார்.

படம் முழுக்க மல்யுத்தப் போட்டி நடக்கும் வெளிப்புற அரங்குகள், உள் அரங்குகள் என பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றது. இந்திப் படங்களுக்கே உரித்தான சில வெளிநாட்டுக் காட்சிகளும் உண்டு.

திடீரென ஒருவன் மல்யுத்தப் போட்டியில் நுழைந்து சாதனைகள் புரிவது என்பது போன்ற சினிமா லாஜிக் இடித்தாலும், அதை ஈடு கட்டுவது சல்மான் கானின் உடற்கட்டு. அதை மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால், காதல், குடும்ப மோதல், கணவன் மனைவி சல்லாபம், தன்முனைப்பு, விடா முயற்சி என பல்வேறு அம்சங்களை ஒன்றாகக் கலந்து, கதையம்சத்தாலும், நடிப்பாலும், பிரம்மாண்டத்தாலும், நம்மை ஈர்க்கும் படம் சுல்தான்.

தோல்வி நிரந்தரம் என்பதை மட்டு ஏற்றுக் கொள்ளாதீர்கள் – கடைசிவரை விட்டுக் கொடுக்காமல் போராடுங்கள் என்பதுதான் படத்தின் தாரக மந்திரம்.

தயங்காமல் படத்தை ஒருமுறை பாருங்கள் – நீங்களும் அந்த வாசகத்தில் நம்பிக்கை வைத்து, சல்மான் கானின் உடல் முறுக்கோடு திரையரங்கை விட்டு வெளியே வருவீர்கள்.

-இரா.முத்தரசன்