Home Featured உலகம் யூரோ ஐரோப்பியக் கிண்ணம்: போர்ச்சுகல் 1- 0 கோல் எண்ணிக்கையில் வாகை சூடியது! ரொனால்டோ...

யூரோ ஐரோப்பியக் கிண்ணம்: போர்ச்சுகல் 1- 0 கோல் எண்ணிக்கையில் வாகை சூடியது! ரொனால்டோ கனவு நிறைவேறியது!

925
0
SHARE
Ad

EURO 2016-LOGO-FRANCEபாரிஸ் – கடந்த ஒரு மாதமாக உலகம் எங்கும் உள்ள காற்பந்து இரசிகர்களின் தூக்கத்தைக்  கெடுத்து வந்த யூரோ ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இறுதியாட்டத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுகலும், பிரான்சும் மோதின.

மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணிக்குத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் பிரான்ஸ் நாட்டை வெற்றி கொண்டு ஐரோப்பியக் கிண்ணத்தை வாகை சூடியது.

2004ஆம் ஆண்டில் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இறுதி ஆட்டத்திற்கு வந்து தோல்வியடைந்த போர்ச்சுகல், ஐரோப்பியக் கிண்ணத்தை வெல்வது இதுவே முதன் முறையாகும்.

#TamilSchoolmychoice

ஆட்டம் நடைபெற்ற ஒன்றரை மணி நேரத்தில் இரண்டு குழுக்களும் கோல் அடிக்க முடியாமல் போராடிய நிலையில், கூடுதலாக வழங்கப்பட்ட அரை மணி நேரத்தில், ஆட்டம் முடிய சுமார் பத்து நிமிடங்கள் இருக்கும் போது போர்ச்சுகலின் ஈடர் என்ற விளையாட்டாளர் இந்தக் கோலை புகுத்தினார். ஈடர் ஒரு மாற்று விளையாட்டாளர் (substitute) மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோல் இல்லாத முதல் பாதி ஆட்டம்

முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களும் சிறப்பாக விளையாடினாலும், வலுவான தற்காப்பு மற்றும் கோல் கீப்பரின் பந்தைத் தடுக்கும் திறமை காரணமாக, கோல் அடிக்க முடியாமல் திணறின. முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் இன்றி சமநிலையில் முடிந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காததைத் தொடர்ந்து கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

காயமடைந்து வெளியேறிய ரொனால்டோ

ஆட்டம் தொடங்கிய எட்டாவது நிமிடத்திலேயே காயமடைந்து திடலை விட்டு வெளியேறிய போர்ச்சுகலின் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பின்னர் மீண்டும் விளையாட வந்தார்.

Euro-Portugal-france-Ronaldoகாயமடைந்து விளையாட முடியாமல் கண்ணீருடன் வெளியேறினாலும் பின்னர் திடலுக்கு வந்த ரொனால்டோ நொண்டிக் கொண்டே தனது குழுவினருக்கு உற்சாகமூட்டினார்…

ஆனால், மற்றொரு விளையாட்டாளருடன் நிகழ்ந்த மோதலால் அவரது முட்டிக் காலில் ஏற்பட்ட காயத்தால் கண்ணீருடன் ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ரொனால்டோ நடக்க முடியாமல் ஒரு தூக்குப் படுக்கையில் வைக்கப்பட்டு, திடலை விட்டே வெளியேற, அது போர்ச்சுகலுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அரங்கில் குழுமியிருந்த இரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இருப்பினும் ரொனால்டோ இல்லாமலேயே ஐரோப்பியக் கிண்ணத்தை வென்று போர்ச்சுகல் ஆட்டக்காரர்கள் சாதனை படைத்துள்ளனர்.