Home Featured தொழில் நுட்பம் செல்லியல் செயலிகளின் புதிய மேம்பாட்டுப் பதிப்பு – இப்போது தரவிறக்கலாம்!

செல்லியல் செயலிகளின் புதிய மேம்பாட்டுப் பதிப்பு – இப்போது தரவிறக்கலாம்!

1315
0
SHARE
Ad

கோலாலம்பூர் –  செல்லியல் வாசகர்களுக்கு கூடுதலான வசதிகளையும், அனுபவங்களையும் தரும் வண்ணம், ஐபோன், ஐபேட், ஆண்டிராய்டு கருவிகளுக்கான செல்லியல் செயலிகளின் புதிய பதிகை (version) இன்று திங்கட்கிழமை சிற்சில மேம்பாடுகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

Selliyal-App-Stores
கூகுள் பிளே வழியாகவும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் வழியாகவும், பயனர்கள் தங்கள் கருவியில் ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்த செயலிகளை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் பதிகையின் முதன்மையானக் கூறு, ‘முகப்பு’ என்னும் புதிய பகுதியே! இந்தப் பகுதியில், செல்லியலில் வெளிவரும் அனைத்துப் பிரிவுச் செய்திகளையும் ஒரே இடத்தில் படிக்கும் வண்ணம் வரிசையாகத் தரப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதன் வழி பிரிவு வாரியாக செய்திகள் வழங்கப்படும் அதே வேளையில், எல்லாப் பிரிவுகளின் செய்திகளையும், ஒருமுகப்படுத்தி, ஒரே வரிசையாக தரப்பட்டுள்ளதால், வாசகர்களுக்கு பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்ட செய்திகளை ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பபட்டுள்ளது.

இந்தப் புதிய மேம்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த செல்லியலின் தோற்றுநரும் அதன் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான  முத்து நெடுமாறன்,  “செல்லியலின் இணையத் தளத்தில் வழங்கப்படுவதுபோல் அனைத்துச் செய்திகளையும் ஒரு மேலோட்டப் பார்வையாகப் பார்க்கும் வாய்ப்பு செயலியிலும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பல பயனர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய வசதி இவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் என்று நம்புகிறோம்”  என்று கூறினார்.

Selliyal Logo 440 x 215ஐபோனில் உள்ள செயலியில் சில இடைமுக மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்டிராய்டு பதிகையில் உள்ளதுபோல் முதன்மைச் செய்திகள் முன் பக்கத்தில் பெரிய அளவில் பதிக்கப்படும்.

‘முகப்பு’ பகுதியின் சேர்க்கையோடு, செய்தி அறிவிக்கை, செய்தி படைப்பு போன்றக் கூறுகளிலும் சிற்சில வழுநீக்கங்களும் (bug fixes) மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஐபோனுக்கென மேம்படுத்தப்பட்டுள்ள செல்லியல் பதிகையில் 3டி தொடுதல் (3D touch) என்ற புதிய, அதிநவீன தொழில்நுட்ப அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த குறிப்பிட்ட செய்தியைப் படிப்பதற்கு முன்னால் அந்த செய்தியை குறியிட்டு அதனை முழுமையாகத் திறக்காமலே விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

செய்திகளின் படைப்பில் மேம்படுத்தப்பட்டிருக்கும் மற்றொரு கூறு வாசகர்களின் கருத்துகள் தானாகவே செய்தியின்கீழ் தோன்றுவதாகும். மற்றவர்களின் கருத்துகளைப் படிக்கும் அதே வேளையில் தங்களின் சொந்தக் கருத்துகளையும் இனி வாசகர்கள் பதிவிடலாம்.

இந்தச் செயலிகளைப் பெறுவதற்கு https://selliyal.com/app  என்னும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.