புதுடெல்லி – ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் மற்றும் காவேரி கலாநிதிமாறன் ஆகியோர் இன்று டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர்.
எனினும், வழக்கறிஞர்கள் அவகாசம் கோரியதை அடுத்து, இவ்வழக்கு விசாரணை வரும் ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனப் பங்குகளை வாங்கிய விவகாரத்தில், அன்னியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேட்டில் முறைகேடு நடந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் தயாநிதி மாறன் உட்பட ஆறு பேருக்கு எதிராக டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றத்தில், இந்தியாவின் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதுதொடர்பான விசாரணை தற்போது வரை நடைபெற்று வருகிறது.
2ஜி வழக்கின் ஒரு அங்கமாக, ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு அமலாக்கத்துறை மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையால் விசாரணை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.