Home Featured நாடு மஇகா தலைவர்களுக்கு எதிரான இராமலிங்கம் குழுவினரின் சதியாலோசனை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!

மஇகா தலைவர்களுக்கு எதிரான இராமலிங்கம் குழுவினரின் சதியாலோசனை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!

1472
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – மஇகா தலைவர்கள், சங்கப் பதிவக அதிகாரிகளுடன் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சாட்டி, முன்னாள் மஇகா பத்து தொகுதி தலைவர் கே.இராமலிங்கம் மற்றும் 7 முன்னாள் மஇகா உறுப்பினர்கள் இணைந்து தொடுத்திருந்த வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

கே.இராமலிங்கத்துடன், வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை மற்றும் டத்தோ எம்.வி.ராஜூ ஆகிய எழுவர் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்திருந்தனர்.

அவர்கள், பிரதிவாதிகளாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ டி.மோகன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ அ.சக்திவேல், வழக்கறிஞர் ஏ.வசந்தி, சங்கப் பதிவக தலைமை இயக்குநர் முகமட் ராசின் அப்துல்லா, சங்கப் பதிவக அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகியோரைப் பெயர் குறிப்பிட்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

டத்தோ வி.எஸ்.மோகன் விளக்க அறிக்கை

V.S.Mohan_இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் (படம்) இன்று வெளியிட்ட அறிக்கையில் கீழ்க்காணும் மேலும் சில விளக்கங்களைத் தந்துள்ளார்:

“கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கே.இராமலிங்கம் உள்ளிட்ட வாதிகள் தொடுத்திருக்கும் இந்த வழக்கு சட்ட அடிப்படை இல்லாதது, என்றும் நீதிமன்ற நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் தேவையில்லாமல் இந்த வழக்கை வாதிகள் தொடுத்திருக்கின்றார்கள் என்றும் எனவே இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சங்கப் பதிவகம் சார்பாக அரசாங்க வழக்கறிஞர் மற்றும் 5 பிரதிவாதிகள் விண்ணப்பங்களைச் செய்திருந்தனர். 

அந்த விண்ணப்பங்கள்தான் இன்று நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. 

இன்று காலையும், பிற்பகலும் இரண்டு தரப்பு வாதங்களையும் நாள் முழுக்க முழுமையாக செவிமெடுத்த கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி இயோ வீ சியாம், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பிரதிவாதிகளின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு தள்ளுபடி செய்த நீதிபதி வாதிகள் ஒவ்வொருவரும் தலா 3,000 ரிங்கிட் செலவுத் தொகை செலுத்த வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

மேலும் தனது தீர்ப்பில், இராமலிங்கமும் மற்றவர்களும் தாங்கள் மஇகா உறுப்பினர்கள்தான் என்பதற்கான போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் திருப்திகரமான முறையில் வைக்கவில்லை எனக் கூறிய நீதிபதி, அவர்கள் மஇகா உறுப்பினர்கள் அல்ல என்பதால் மஇகா சார்பாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ற முறையில் நீதிமன்றத்தில் நீதி கேட்க அவர்களுக்கு உரிமையில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

இதற்கு முன்பு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மாபி முன்னிலையில் நடைபெற்ற மற்றொரு வழக்கில் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பு சரியானதாகும் என்றும் நீதிபதி இயோ இன்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

2013 மறுதேர்தல் நடத்தும் சங்கப் பதிவக முடிவானது அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு சங்கப் பதிவகத்திற்கு அனுப்பிய இரண்டு கடிதங்களின் அடிப்படையில் சங்கப் பதிவகம் மேற்கொண்ட முடிவு என நீதிபதி அஸ்மாபி முந்தைய வழக்கில் வழங்கியிருந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதி இயோ, இராமலிங்கம் குழுவினர் இன்றைய வழக்கில் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளால் அந்த முந்தைய வழக்கின் தன்மையும், தீர்ப்பும் பாதிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.”

மஇகாவின் நிலைப்பாடு

MIC logo“மஇகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் அவரது தலைமையின் கீழ் இயங்கும் மற்ற தலைவர்களும் ஆரம்பம் முதல் சங்கப் பதிவகம் தொடர்பான விவகாரங்களில் வெளிப்படைத் தன்மையுடனும், மத்திய செயற்குழுவின் முடிவுகளின்படியும், நியாயமாகவும், கட்சியின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டும் செயல்பட்டு வந்திருக்கின்றோம் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வி.எஸ்.மோகன்,

“எங்களின் அந்த நிலைப்பாடு, இன்றைய வழக்கின் தீர்ப்பின் மூலம் மீண்டும் ஒருமுறை தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றும் கூறியுள்ளார்.