கோலாலம்பூர் – இந்துக்களையும், சீக்கியர்களையும் கேவலப்படுத்தும் வண்ணம் பாடங்கள் வரைந்த மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற உயர்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோவின் அறிவிப்பை மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி (படம்) வரவேற்றுள்ளார்.
“இதன் மூலம், உண்மை நிலவரங்களை திரித்துக் கூறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி மக்களுக்கு சென்று சேர்ந்திருக்கின்றது. இனி இன ரீதியான சம்பவங்களை விவரிப்பதற்கு முன் அனைவரும் எச்சரிக்கையோடு இருப்பர். அத்துடன் இன, மத பேதங்களை உருவாக்கி அதை நாட்டின் கல்வி அமைப்பில் புகுத்துவதை இனியும் அனுமதிக்கக் கூடாது” என்றும் தேவமணி கூறியுள்ளார்.
“நாட்டில் இன நல்லிணக்கம் தற்போது சுமுகமாக இல்லாத சூழ்நிலையில், நாம் நமது மாணவர்களுக்கு ஒற்றுமை, இன, மத நல்லிணக்கம் ஆகியவற்றை போதிக்க வேண்டும்” என பிரதமர் துறையின் துணை அமைச்சருமான தேவமணி பிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளத்திடம் தெரிவித்துள்ளார்.
விரிவுரையாளரை பணிநீக்கம் செய்யும் முடிவை பல்கலைக் கழகம்தான் எடுத்தது என்றும், அமைச்சு அது குறித்து எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் உயர் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ தெரிவித்திருந்தார்.