கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் தற்போதைய செயல்பாடுகள், அவரின் முந்தைய சாதனைகளை அழித்துவிடும் வகையில் இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சில தினங்களுக்கு முன்பு கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மகாதீரின் மகள் மரீனா மகாதீர், தனது டுவிட்டர் பக்கத்தில் மஇகா குறித்துப் பதிவு செய்த ஒற்றை வரி, இந்த விவகாரத்தில் இருதரப்பிலும் மேலும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
“வரலாறு ஞாபகம் வைத்திருக்கும் மஇகா-வின் (பங்களிப்பையும், சாதனைகளையும்).. நான் நிச்சயமாகச் சொல்கிறேன்….” என்று மரீனா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மரீனாவின் கருத்துக்கு எதிராக மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜா வெளியிட்ட அறிக்கையில், “மலேசியாவின் இன்றைய நிலைக்கு, மகாதீர் தனது ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த இனவாதக் கொள்கைகள் தான் காரணம்” என்று குற்றம் சாட்டினார்.
அதோடு, கடந்த 2008-ம் ஆண்டு முதல் மஇகாவும், மற்ற கூட்டணிக் கட்சிகளும் நிலைத்து நிற்பதற்காக கடும் போராட்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும், அதற்குக் காரணமும் அந்த இனவாதக் கொள்கைள் தான் என்றும் சிவராஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜசெக மகளிர் விளம்பரப் பிரிவுச் செயலாளரும், பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கஸ்தூரி பட்டு இன்று வெளியிட்ட அறிக்கையில், 22 ஆண்டுகள் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ், தேசிய முன்னணி கூட்டணிக் கட்சியில் இருந்து கொண்டு, அவர் இனவாதக் கொள்கைகள் கொண்டு போது அமைதி காத்ததும் மஇகா தான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மஇகா-விடம் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
“கடந்த 1981 முதல் 2003-ம் ஆண்டு வரை தேசிய முன்னணி அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியாக இருந்த மஇகா செயல்படாமலா இருந்தது?”
“கடந்த 1982 முதல் 1999 வரையில், 5 பொதுத்தேர்தல்களில், மகாதீரின் தலைமையின் கீழ், தேசிய முன்னணியின் கொடியின் கீழ் வேட்பாளர்களை நிறுத்தாமலா இருந்தது?”
“டாக்டர் மகாதீர் “இனவாத” கொள்கைகளையும், வியூகங்களையும் கொண்டு வரும் போது மஇகாவில் கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள், அமைச்சர்கள் ஆகியோர் இல்லாமலா இருந்தார்கள்?” என்று கஸ்தூரி பட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாதீர் அது போன்ற இனவாதக் கொள்கைகளைக் கொண்டு வந்த போது மஇகா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்தது ஏன்? என்று கஸ்தூரி பட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.