ஸ்கூடாய், மார்ச் 19 – கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட – ஜ.செ.க. மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூரின் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் தற்போது உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோகூரின் ஸ்கூடாய் நகரில் நடைபெற்ற ஜனநாயக செயல் கட்சியின் 47வது ஆண்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூடியிருந்த 20,000 மக்களிடையே பலத்த ஆரவாரத்துடன் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.
ஸ்கூடாய் சட்டமன்றம் கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகின்ற தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த இரு பொதுத் தேர்தல்களில் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிட்டு தேசிய முன்னணியிடம் தோல்வி கண்ட பிகேஆர் தற்போது லிம் கிட் சியாங் ஜோகூர் மாநிலத்தில் நுழைவதற்கு ஏதுவாக இந்த தொகுதியை ஜ.செ.கவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் ஜோகூர் மாநிலத்தின் சீன வாக்குகளை மக்கள் கூட்டணியின் பக்கம் திருப்புகின்ற பிரச்சார பீரங்கியாக லிம் கிட் சியாங் செயல்படுவார்.
கேலாங் பாத்தா தொகுதியை ஒட்டியுள்ள மற்ற தொகுதிகளிலும் அவர் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், கிட் சியாங்கின் வருகையால் ஜோகூரில் மக்கள் கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
அதே வேளையில், ஜோகூர் எங்களின் கோட்டை எனக் கூறி வந்த தேசிய முன்னணி கட்சியினர், சீன வாக்குகளின் ஆதரவு தேசிய முன்னணிக்கு மற்ற தொகுதிகளிலும் குறையுமே என்ற கலக்கத்துக்கும், சோர்வுக்கும் ஆளாகியுள்ளனர்.
மக்கள் கூட்டணியின் பொது எதிரி தேசிய முன்னணி
“மக்கள் கூட்டணியின் உறுப்பியக் கட்சிகளுக்கிடையில் தொகுதிகளைப் பங்கீடு செய்து கொள்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் அதையும் மீறி நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றோம். எங்களின் பொது எதிரி தேசிய முன்னணிதான் என்பதை நினைவில் வைத்துள்ளோம்” என்று மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் ஸ்கூடாய் பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
“எனது வாழ்க்கையின் மிகப் பெரிய போராட்டம்” – லிம் கிட் சியாங்
“எனது அரசியல் பயணத்தில் மிகப் பெரிய போராட்டம் வரும் பொதுத் தேர்தலில் கேலாங் பாத்தா தொகுதியை வெற்றி கொள்ள நான் நடத்துகின்ற போராட்டமாக இருக்கும். இது பாதுகாப்பான தொகுதி எனக் கூற மாட்டேன். ஆனால், நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர போராட்டக் களத்தில் நான் முன்னணியில் நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்கின்றேன்” என்று இதே ஸ்கூடாய் பிரச்சாரக் கூட்டத்தில் உற்சாகத்துடன் உரையாற்றிய லிம் கிட் சியாங் கூறினார்.
“ஜோகூர் மாநில மக்கள் தயார் என்றால் அவர்களுடன் சேர்ந்து போராடி மாற்றத்தைக் கொண்டு வர நானும் தயார். ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்களில் தேசிய முன்னணி வசமுள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 18 தொகுதிகளை வெற்றி கொள்ள நாங்கள் இலக்கு வைத்திருக்கின்றோம்” என்றும் லிம் கிட் சியாங் கூறினார்.
ஏறத்தாழ 20,00 பேர் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளது ஜோகூரில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களை பிரதிபலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.