Home Featured நாடு விஜயராணியின் “அவசர உலகமா? அவரவர் உலகமா?” – நூல் வெளியீட்டு விழா!

விஜயராணியின் “அவசர உலகமா? அவரவர் உலகமா?” – நூல் வெளியீட்டு விழா!

931
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அவசர உலகமா? அவரவர் உலகமா? – இன்றைய சூழலில் இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் அடிக்கடி எழலாம்.

இரவு பகல் பார்க்காத பரபரப்பான வாழ்க்கைச் சூழல், சமூகம் சார்ந்த பல பிரச்சினைகள், மனநலம், உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள், பணப்பற்றாக்குறை இப்படியாகப் பல சிக்கல்களுக்கு நடுவில் நகர்ந்து கொண்டிருக்கிறது மனித வாழ்வு.

இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன? என்று யோசித்துப் பார்த்தால் அடுக்கடுக்கான கேள்விகள் நீண்டு கொண்டே போகின்றன.

#TamilSchoolmychoice

Vijayarani1இந்நிலையில், சமூகம் தொடர்பான பல விசயங்களையும், சம்பவங்களையும் அலசி ஆராய்ந்து தனது பார்வையில், எளிய நடையில், அனைவருக்கும் புரியும் வகையில் வாரந்தோறும் நாளிதழில் கட்டுரைகளாக எழுதி வந்தார் எழுத்தாளர் விஜயராணி செல்லப்பா.

“ஆழம் தெரியாமல் காலை விடுவதால்..” என்ற தலைப்பில் முதிர்ச்சியடையாத இளம் வயதுக் காதல், திருமணம் பற்றி, “எல்லாம் ஓரினம் – உயிரினம்” என்ற தலைப்பில் மரம் நடுவதன் முக்கியத்துவம் பற்றி, “பாபநாசம் படமா? பாடமா?” என்ற தலைப்பில் சினிமா பற்றி, “எது அந்தரங்கம்?, எது பகிரங்கம்?” என்ற தலைப்பில் இன்றைய நட்பு ஊடகங்கள் பற்றி, என இன்னும் பல தலைப்புகளில், பயனுள்ள தகவல்களை தனது கட்டுரையில் வாயிலாக வெளியிட்டு வந்தார் விஜயராணி.

தற்போது அக்கட்டுரைகளைத் தொகுத்து, “அவசர உலகமா? அவரவர் உலகமா?” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடவுள்ளார்.

அஸ்ட்ரோ தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், மேடைப் பேச்சாளர், தொழிலதிபர் என பன்முகங்களைக் கொண்ட விஜயராணி தற்போது, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதவித் தலைவராகப் பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூல் வெளியீடு

Vijayaraniவரும் ஜூலை 27-ம் தேதி, புதன்கிழமை, மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் மாலை 6 மணியளவில், ‘அவசர உலகமா? அவரவர் உலகமா?’ என்ற நூல் வெளியீடு, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், தேசியத் துணைத் தலைவர் டத்தோ சரவணன் ஆகியோர் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பல முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாக, திரைப்பட இயக்குநர் பி.சமுத்திரகனி, டாக்டர் காதிர் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றவிருக்கின்றனர்.

நூல் வெளியீட்டோடு இணைந்து இது ஓர் இலக்கிய விழாவாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

எனவே, இந்நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்களோடு, பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நூல் வெளியீடு நடைபெறும் நாள்: 27-7- 2016 (புதன்கிழமை)

இடம்: நேதாஜி மண்டபம், மஇகா தலைமைச் செயலகம், கோலாலம்பூர்.

நேரம் : மாலை 6 மணி.