கொழும்பு – இந்திய நாட்டுக்கான 3 நாள் அலுவல் வருகையை முடித்துக் கொண்டு, புதுடில்லியிலிருந்து கொழும்பு வந்து சேர்ந்துள்ள சாஹிட் ஹாமிடி இன்று முதல் இலங்கைக்கான இரண்டு நாள் அலுவல் வருகையை தொடரவுள்ளார்.
மலேசிய சிறைச்சாலைகளில் இருக்கும் 50 இலங்கைக் குடியுரிமை பெற்றவர்களை விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசு விடுத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சாஹிட் கொழும்புவில் உள்ள பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.
இவர்களில் 38 பேர் சிறைச்சாலைகளில் வாடுவதாகவும், 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள சாஹிட், இவர்களில் பெரும்பாலோர், குடிநுழைவுச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாகத் தங்கிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கையின் உள்துறை அமைச்சரை சாஹிட் சந்தித்துப் பேசினார்.
இலங்கையிலிருந்து 5,000 தோட்டத் தொழிலாளர்கள்
இலங்கையிலிருந்து 5,000 தோட்டத் தொழிலாளர்களை மலேசியத் தோட்டங்களில் பணிபுரிய தருவிப்பதற்கு சைம் டார்பி நிறுவனம் செய்துள்ள விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சாஹிட் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவையும் மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ள சாஹிட், இலங்கையிலுள்ள மலேசியர்களையும், அங்கு தங்கி பணிபுரிந்து வருபவர்களையும் சந்திப்பார்.
(படம்: நன்றி – அகமட் சாஹிட் ஹாமிடி டுவிட்டர் பக்கம் – கொழும்பு வந்தடைந்த சாஹிட் ஹாமிடி அதிகாரிகளால் வரவேற்கப்படுகின்றார்)