கோலாலம்பூர் – “ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்” என்ற பழமொழிக்கேற்ப, இப்போது அரசியல் காற்று மொகிதின் யாசின் பக்கம் வீசுகின்றது போலும்.
எந்த விவகாரத்தைப் பற்றிப் பேசியதற்காக, கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரோ, எந்த விவகாரத்திற்காக தனது துணைப் பிரதமர் பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்தாரோ, அதே விவகாரம் இன்று விசுவரூபம் எடுத்து அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறையால் உலகம் எங்கும் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
“அமெரிக்க நீதித் துறையின் அறிக்கையில் மலேசியாவின் முதல்நிலை அதிகாரி 681 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை எம்பேங்க் வங்கியில் உள்ள தனது தனிப்பட்ட கணக்கில் வைத்திருந்தார் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நமக்குத் தெரிந்தவரையில் இத்தகைய தொகையை நஜிப் ஒருவரைத் தவிர வேறு யாரும் தங்களின் சொந்த வங்கிக் கணக்கில் வைத்திருக்கவில்லை” எனப் பகிரங்கமாக மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்.
அபாண்டி அலிக்குத் தெரியாவிட்டால் அமெரிக்க நீதித் துறையை கேட்கட்டும்
அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி (படம்) தனது கடமையிலிருந்து தவறிவிட்டார் என்றும் மொகிதின் கடுமையாக சாடியுள்ளார்.
“மலேசியாவின் முதல்நிலை அதிகாரி யார் என்பது அபாண்டி அலிக்குத் தெரியாவிட்டால் அவர் அமெரிக்காவின் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்” என்றும் மொகிதின் கிண்டலாகக் கூறியுள்ளார்.
“அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பணியை உருப்படியாகச் செய்யவில்லை. அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள சிவில் வழக்கில் நஜிப்பிற்கு சம்பந்தமில்லை என்று எப்படிக் கூறுவது? அப்படியானால், மலேசியாவின் முதல்நிலை அதிகாரி என அமெரிக்க நீதித் துறை குறிப்பிடுவது யாரை?” என்றும் மொகிதின் கேள்வி எழுப்பியுள்ளார்.