பெர்ன் (சுவிட்சர்லாந்து) – 1 எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகளின் மூலம் ‘திருடப்பட்ட’ பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட விலையுயர்ந்த பழங்கால ஓவியங்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை திருடப்பட்ட 1எம்டிபி பணத்தை மீட்கும் நடவடிக்கையாக நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடக்கியுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இந்த பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மூன்று பழங்கால ஓவியங்களை மீட்கும் நடவடிக்கை இன்னும் முழுமையடையவில்லை என்பதால் அந்த ஓவியங்கள் எங்கிருந்து கைப்பற்றப்பட்டன என்பது போன்ற விவரங்களைத் தற்போதைக்கு வெளியிட இயலாது என சுவிட்சர்லாந்து நீதித் துறை இலாகாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் பத்திரிக்கையில் இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியையும் சுவட்சர்லாந்து நீதித்துறை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், 1எம்டிபி விவகாரத்தில் சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கி (UBS) 1எம்டிபி விவகாரம் தொடர்பில் அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தனது ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில சந்தேகத்திற்கு இடமளிக்கும் பணப் பரிமாற்றங்களை தானே கண்டுபிடித்த யுபிஎஸ் வங்கி, நீதித் துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து அணுக்கமாகப் புலனாய்வு செய்து வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.