மூனிக் – ஜெர்மனியின் மூனிக் நகரில் மூன்று துப்பாக்கிக்காரர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு தாக்குதல்காரனும் அடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மற்ற தாக்குதல்காரர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
- மூனிக் நகரில் உள்ள ஒரு பேரங்காடியில் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திய 3 பயங்கரவாதிகளைத் தேடும் வேட்டையில் நகர் முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
- இதன்காரணமாக, அனைவரும் இல்லங்களிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வணிக மையங்கள் மூடப்பட்டுவிட்டன. பொது மக்கள் பயன்படுத்தப்படும் மையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.
- பொதுப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
- உள்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணியளவில் (மலேசிய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில்) ஒலிம்பியா பேரங்காடியில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
- 1972ஆம் ஆண்டில் இதே மூனிக் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ள பேரங்காடியில்தான் இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
- இதைத் தொடர்ந்து பல இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.