Home Featured நாடு ஓவியர் ஸ்டீபன் மேனனின் ஓவியக் கண்காட்சி!

ஓவியர் ஸ்டீபன் மேனனின் ஓவியக் கண்காட்சி!

910
0
SHARE
Ad

Artistகோலாலம்பூர் –  வரவேற்பறையில் வரைந்தும், வரைந்து முடிக்கப்படாமலும் சில ஓவியங்கள், பாதிக் குழப்பி மீந்து போயிருக்கும் வர்ணங்கள்.. சிதறி கிடக்கும் பென்சில்கள், ஓவியத்தாள்கள் என முடியாத ஓவியம் மாதிரியே இருக்கிறது ஓவியர் ஸ்டீவன் மேனனின் வீடு.

ஓவியர் ஸ்டீவன் மேனன் மலேசிய ஓவியர்கள் மத்தியில் பிரபலமான ஓவியராக இருந்தாலும், மலேசிய இந்தியர்கள் மத்தியில் இன்னமும் அறியபடாதவராகவே இருக்கிறார். மிக மிக எளிய தோற்றம் கொண்டவரான ஸ்டீப்பன் மேனன் குவாந்தான் பகாங்கில் பிறந்தவர். உடலியல் ஓவியர் என அறியப்படும் இவர் அதில் புதிய முயற்சிகளைத் தொடர்ந்து செய்பவராகவே இருக்கிறார்.

1990-ல் மலேசிய கலை காட்சியகத்தில் ஓவியர் அம்ரோன் ஓமாரின் ‘சுய ஓவியங்களை’ (போட்ரேட்) காணும் வாய்ப்பு அவருக்கு ஏதேர்ச்சையாக அமைந்தது. மலாய் ஓவியர்களில் மத்தியில் மிகவும் பிரலமான அம்ரோன் ஓமாரின் ஓவியக் கண்காட்சி அது.

#TamilSchoolmychoice

அந்தக் கண்காட்சியில் அம்ரோன் ஒமார் இறுகிய முகத்துடன் பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி ஸ்டீப்பன் மேனனை வெகுவாகப் பாதித்தது. இதுவே அவரை ஓவிய உலகத்திற்குள் கொண்டு வருவதற்கான தொடக்கச் சம்பவமாகவும் இருந்ததாகக் கூறுகிறார்.

கோலாலும்பூர் கலைக் கல்லூரியில் குறிவரை வடிவமைப்புப் படிப்பு முடிந்ததும், அனிமேட்டராகப் பணிப்புரிந்து கொண்டே உடலியல் அசைவுகள் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைய தொடங்கினார். அதோடு அம்ரோன் ஓமாரை மானசீகமாகக் குருவாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து அவருடனான சந்திப்பை ஏற்படுத்திக்கொண்டார். அந்தக் குரு பக்தி இன்றும் ஸ்டீவன் மேனனிடம் இருக்கிறது.

Artist1தன்னைத் தானே வரைந்துக்கொள்ளும் போக்கு ஸ்டீவன் மேனனின் ஓவியங்களில் முகுதியாகக் காணப்பட்டாலும், அந்த ஓவியங்களில் அவரின் கண்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருக்கும். இது ஏன் என அவரோடு கேட்டபோது, அவர் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையோடு எதிர்வினையாற்ற விரும்பவில்லை எனக் குறிப்பிடுகிறார். “நான் ஆண்டுக்கு ஒருமுறை இப்படி என் கண்ணைக் கட்டிக்கொள்வது மாதிரியான ஓவியத்தை வரைவேன். அப்படி வரையும் போது என்னுடன் இருக்கும் ஏதாவது ஒரு பழக்கத்திலிருந்து நான் விடுபடுவேன். உதாரணமாக நான் கண்களைக் கட்டிக்கொண்டு புகைப்பிடிக்கும் ஓவியம் ஒன்றை வரைந்திருப்பேன். அன்று வரையும்போது நான் பிடித்த கடைசிச் சிகரெட் அதுதான். “

‘கண்ணோடு கண்’ , கேலிச்சித்திரம் வகைப்பட்ட ‘இன்னும் தொடரும்’உள்ளிட்ட தலைப்புகளில் பல ஓவியக் கண்காட்சிகளை அவர் நமது நாட்டில் நடத்தியுள்ளார். வெளிநாடுகளிலும் அவர் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளதோடு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

பல அனுபவங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள ஓவியர் ஸ்டீவன், தனது அடுத்தக் கண்காட்சியை நாளை மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்தவுள்ளார். இலவசமாக நடக்கவுள்ள இந்தக் கண்காட்சியில் பொது மக்கள் குறிப்பாக இந்தியர்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என ஓவியர் ஸ்டீவன் மேனன் எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார்.

தகவல்: நன்றி (யோகி சந்துரு)