சிங்கப்பூர் – பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனை அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மருத்துவமனையில் பார்வையிட்டு வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரெனப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நாதன், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தகவல் அறிந்த நடப்பு அதிபர் டோனி டான் கெங் யாம், நேற்று தனது மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்று நாதனின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்டார்.
“திரு.நாதன் அவர்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமை நீதிபதி சுந்தரேஸ் மேனன், இடைக்காலப் பிரதமர் டியோ சீ ஹியான் மற்றும் தற்காப்பு அமைச்சர் நங் எங் ஹென் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் நேற்று முதல் மருத்துவமனையில் நாதனைப் பார்வையிட்டு வருகின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், நாதனின் “மோசமான உடல்நிலை” குறித்து கவலையும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.