புத்ராஜெயா – வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் இரண்டு தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்படும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை துணைக் கல்வியமைச்சர் டத்தோ பி.கமலநாதனுடன், பள்ளிக் கட்டுமான அங்கீகரிப்பு விழாவில் கலந்து கொண்ட டாக்டர் சுப்ரா அந்த இரு பள்ளிகள் பெயரை அறிவித்தார்.
“அவை கோலாலம்பூர், பண்டார் மாஹ்கோத்தா செராஸ் தமிழ்ப் பள்ளி, ஜோகூர் பாசீர் கூடாங்கில், பண்டார் ஸ்ரீஆலம் தமிழ்ப் பள்ளி ஆகும்” என்று சுப்ரா தெரிவித்தார்.
இந்த இரு பள்ளிகளும் தலா 200 முதல் 300 மாணவர்களைக் கொண்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், அந்த இரு பள்ளிகளும் அரசாங்க உதவி பெறும் என்றும், கட்டுமானச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்கும் என்றும் சுப்ரா தெரிவித்தார்.
24 வகுப்பறைகள் கொண்ட பண்டார் மாஹ்கோத்தா செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு 21 மில்லியன் ரிங்கிட்டும், 18 வகுப்பறைகள் கொண்ட பண்டார் ஸ்ரீஆலம் தமிழ்ப் பள்ளிக்கு 20.7 மில்லியன் ரிங்கிட்டும் செலவாகும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சுப்ரா அறிவித்தார்.