Home இந்தியா மத்திய அரசு அவசர ஆலோசனை

மத்திய அரசு அவசர ஆலோசனை

637
0
SHARE
Ad

karunanithiசென்னை , மார்ச்.19- ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியா தனது நிலை என்ன என்பதை இன்று முடிவு செய்கிறது.

இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் மூத்த மத்திய அமைச்சர்கள் 3 பேர் சென்னையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களுக்காக அந்த நாடு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதன் மீது 21ம் தேதி விவாதம் நடக்கிறது. வாக்கெடுப்பும் நடக்க வாய்ப்புள்ளது.

அந்த தீர்மானம் இலங்கையை நீதியின் முன்னால் நிறுத்தும் அளவுக்கு பலமாக இல்லை என்பதால், கடுமையான சில திருத்தங்களை சேர்க்க இந்தியா முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.

மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. திருத்தங்களை தீர்மானத்தில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். இது பற்றி மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

அதை தொடர்ந்து தனி விமானத்தில் நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி ஆகியோர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தை முடிவில் வெளியே வந்த மத்திய அமைச்சர்கள் நிருபர்களிடம் பேசும்போது, ‘இலங்கை பிரச்னை தொடர்பாக விரிவாக பேசினோம். அதன் விவரங்களை பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவரிடம் தெரிவிப்போம்” என்றனர்.

இதற்கிடையே, அமெரிக்க தீர்மானத்தை கடுமையாக்க தக்க திருத்தங்களை இந்தியா செய்ய வேண்டும்  என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தீர்மானத்தின் இறுதி நகல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு இன்று அதிகாலை வழங்கப்படுகிறது. அதன் மீதான இந்தியாவின் நிலை என்ன என்பது இன்று முடிவு செய்யப்படும். இது பற்றி ஆலோசனை நடத்த ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதர் திலீப் சின்கா டெல்லிக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்தியா, இலங்கை பாதுகாப்பு  துறை செயலாளர்கள் இடையே 23ம் தேதி நடக்க இருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு நேற்று திடீரென ரத்து செய்துள்ளது.