கோலாலம்பூர் – அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கபாலி திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வழங்கிய நேர்காணலில் அத்திரைப்பட இயக்கம் குறித்து பகிர்ந்தவர், அப்படத்தில் அவர் ‘கபாலி’ நடத்துவதாகக் காட்டும் ‘ லைப் ஃபிரி’கல்லூரி மலேசியாவில் தான் பார்த்த மை ஸ்கில்ஸ் கல்லூரியின் மாதிரியே எனக்கூறியிருக்கின்றார்.
கபாலி இயக்குநர் ரஞ்சித் நேர்காணலில் கூறியது என்ன?
கபாலி பட உருவாக்கத்திற்கு முன்பாக தனது மலேசிய வருகையின்போது இயக்குநர் பா.இரஞ்சித் மை ஸ்கில்ஸ் கல்லூரி வளாகத்திற்கு வருகை தந்து பார்வையிட்டபோது…
அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது, “மை ஸ்கில் கல்லூரியைத்தான் கபாலி திரைப்படத்தில் ‘லைப் பிரி’ கல்லூரியாக உருவமைத்திருக்கிறேன். பல்வேறு காரணங்களால் கல்வியைத்தொடர முடியாத தமிழ் மாணவர்கள் பலர் குண்டர் கும்பலில் ஈடுபடுகின்றனர். இக்கல்லூரி இதுபோன்ற பாதை மாறிப்போன மாணவர்களுக்குத் தொழில்கல்வி வழங்கி அவர்களும் வாழ்க்கையை நல்ல முறையில் தொடர வழிவகை செய்கின்றது.” என ரஞ்சித் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
வழக்கறிஞர் பசுபதி கருத்து
இந்த நேர்காணல் குறித்து மை ஸ்கில்ஸ் நிறுவனர் வழக்கறிஞர் பசுபதி (படம்) கருத்து தெரிவித்தபோது, “கபாலி இயக்குனரும் அவர் குழுவினரும் கடந்த ஆண்டு எங்கள் கல்லூரிக்கு வந்தது உண்மைதான். எங்கள் வகுப்பறைகளையும் அங்கு நடக்கும் பாட முறைகளைப் பார்த்தனர். எங்கள் மாணவர்களின் ஓவியங்களைப் பார்த்து வியந்தனர். அவர்களுடன் கலந்துரையாடினர். எங்கள் கல்லூரி நிர்வாகக் குழுவினரிடம் நட்புடன் கருத்துப்பரிமாற்றம் செய்தனர். ஏறக்குறைய ஒரு நாள் எங்களுடன் நேரம் செலவழித்து பல தகவல்களையும் பெற்றுச்சென்றனர். கபாலி திரைப்படத்தைப் பார்த்தபோது எங்கள் கல்லூரியை அதில் ஓர் முக்கிய அங்கமாக காட்சிப்படுத்தியது மிகுந்த உற்சாகம் கொடுத்தது. அதை இந்தச் சமூகத்தின் கதையாகவே நான் கருதுகிறேன்.” என்றார்.
கபாலி கதை உருவாக்கத்தில் பங்கு பெற்ற ம.நவீன்…
கபாலி திரைக்கதைக்கு மலேசியாவிலிருந்து பணியாற்றிய எழுத்தாளர் ம.நவீன் ரஞ்சித்தின் நேர்காணல் குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் இரஞ்சித்தின் மலேசிய வருகையின்போது அவருடன் ம.நவீன்…
“பா.ரஞ்சித் என்னிடம் கேட்ட திரைக்கதைக்கான தகவல்களுக்கு அக்கல்லூரி மிகச்சிறந்த தரவுகளை தரும் என நான் நம்பினேன். அம்மாணவர்களைச் சந்திப்பதால் இந்நாட்டுத் தமிழர்களின் வாழ்க்கையின் இன்னொரு பகுதியை அவர்களால் புரிந்துகொள்ள முடியும் என அக்கல்லூரிக்கு அழைத்துச்சென்றேன். பின்னர் கதை விவாதத்திற்காக இயக்குனர் அழைப்பின் பேரில் தமிழகத்திற்குச் சென்றபோது ‘மை ஸ்கில்ஸ்’ கல்லூரி திரைக்கதையில் முக்கிய அங்கம் வகித்ததில் அளவில்லாத ஆனந்தம். குண்டர் கும்பலில் ஈடுபட்டுள்ள இந்நாட்டு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கலுக்கு ஒரு முக்கியத் தீர்வை வழங்கும் மையமாக இக்கல்லூரியைத் திரைப்படம் வழி காட்டுவது ஆக்ககரமானது. தன் நேர்காணலில் ‘மை ஸ்கில்ஸ்’ குறித்து ரஞ்சித் கூறியுள்ளது கூடுதல் மகிழ்ச்சி” என்றார் ம.நவீன்.
மலேசிய வருகையின்போது மை ஸ்கீல்ஸ் கல்லூரியை சுற்றிப் பார்க்கும் இயக்குநர் இரஞ்சித்…
மை ஸ்கீல்ஸ் கல்லூரியைப் போலவே தமிழகத்தில் அச்சுவார்த்தது போல அரங்கம் அமைத்து காட்டப்படும் ‘பிரி ஸ்கூல்’ மூலம், மை ஸ்கில்ஸ் கல்லூரியின் தேவையைத் திரைப்படம் வழி அறியத்தந்த இயக்குனர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கல்லூரி தரப்பினர், ரஞ்சித்தின் இந்த நேர்காணலால் லாப நோக்கமற்ற இக்கல்லூரியின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களின் கவனத்தில் விழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.