கோலாலம்பூர் – மலேசிய நாட்டில் தனது இலக்கியப் படைப்புகளாலும், பங்களிப்பாலும், பல்லாயிரக்கணக்கானோரின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்து நிலைத்து நின்று விட்ட அமரர், இறையருட் கவிஞர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவு நாள் இன்று!
அவர் நம்மிடம் இருந்து பிரிந்து ஆண்டுகள் இரண்டு கடந்து விட்டாலும், இன்னும் அவரது நினைவுகள் பசுமையாக பலரை ஆக்கிரமித்து வருகின்றன.
அன்னாரின் “உங்கள் குரல்” இதழின் படைப்புகளும், கருத்தாழமிக்க இலக்கியப் பதிவுகளும் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறனின் முயற்சியால் மின் பதிவுகளாக, பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது, கீழ்க்காணும் இணைப்பில் இணைய உலகில் உலா வருகின்றன.
http://kural.selliyal.com/
சீனி ஐயா குறித்த விரிவுரையாளர் மு.சேகரனின் நினைவுகள்
துவாங்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளர் மு.சேகரன் சீனி ஐயாவுடன் நெருங்கிப் பழகியவர் என்ற முறையில், அவர் குறித்த நினைவுகளை ‘செல்லியல்’ வாசகர்களுக்காக நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
“இறையருட் கவிஞர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் இந்த நாட்டில் நம்மோடு தொல்காப்பியராகவும் தொல்காப்பியமாகவும் வாழ்ந்த மாபெரும் தமிழறிஞர். இன்று நமக்கெழும் இலக்கணக் குழப்பங்களுக்கு விடைகாண முடியாமல் தவிக்கும்போது ஐயாவின் இழப்பு நன்கு உணரமுடிகிறது. அதுமட்டுமல்லாமல், இந்நாட்டில் ஐயா தனிநபராக அல்லாமல் ஓர் இயக்கமாகவே வாழ்ந்தார். பள்ளிக் குழந்தைகள் முதல் கல்விமான்கள் அரசியல் தலைவர்கள்வரை அனைவரையும் அணைத்து நின்ற ஆலமரம் அவர். தமிழ் இருக்கும் இடத்தில் சீனி ஐயா இருப்பார்; சீனி ஐயா இருக்கும் இடத்தில் தமிழ் தானே வந்து அமர்ந்துகொண்டு அவரின் இனிய தமிழைக் கேட்டுச் சுவைக்கும்! தமிழ் இலக்கணத்தையும் தமிழ்க் கவிதையையும் நக்கீரப் பார்வையோடு காத்து வந்த தமிழ் அறிஞர் ஐயா!” என சீனி ஐயாவைப் பற்றி புகழ்ந்துரைக்கிறார் மு.சேகரன்.
“நம் நாட்டில் கவிஞர், அறிஞர் பலர் நம்மிடையே வாழ்ந்து மறைந்திருந்தாலும் ஐயாவின் பிரிவைப்போல துயரம் அமைந்ததில்லை. அவர் நம்மைவிட்டுப் பிரிந்து ஆண்டுகள் இரண்டு கடந்தபோதிலும் நெஞ்சில் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியாத துயரச் சம்பவமாகவே இருக்கிறது. எனினும் ஐயா உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் உறைந்து நிற்கிறார் என்பது உண்மை. அன்னாரின் ஆன்மா அமைதிகொள்ள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்!” என்றும் சேகரன் தனது தெரிவித்தார்.
“என்னே ஒரு ஆளுமை! என்னே ஒரு புலமை” – கல்வி அமைச்சின் மூர்த்தி புகழாரம்!