கோலாலம்பூர் – 28-வது மலேசியத் திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான பிரிவில் பங்கேற்க வேண்டுமானால், அப்படத்தில் 70 சதவிகித வசனங்கள் மலாய் மொழியில் இருக்க வேண்டும் என்று மலேசிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (பிஎப்எஎம்) கூறியிருப்பது மலாய் மொழி அல்லாத திரைப்படக் குழுவினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு மற்றும் எதிர்காலத்தில், மலேசியப் படங்களில் தேசிய மொழியை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிஎப்எம் தெரிவித்துள்ளது.
மேலும், தாங்கள் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் (ஃபினாஸ்) இணைந்து, மலேசியாவில் மற்ற மொழிகளோடு, மலாய் மொழியே நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி என்பதை எதிர்கால திரைப்படத்துறையில், நிலைநாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிஎப்எம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், வரும் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள 28-வது மலேசியத் திரைப்பட விழாவில், ‘ஒலாபோலா’, ‘ஜகாட்’ உள்ளிட்ட இரண்டு முக்கியப் படங்கள், ‘சிறந்த படம்’ என்ற பிரிவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.