ரியோ டி ஜெனிரோ – இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்களிலேயே மிக இளவயது போட்டியாளராகத் திகழ்பவர், 13 வயது கௌரிகா சிங். நேப்பாளத்தைச் சேர்ந்தவர்.
நீச்சல் போட்டிகளில் 100 மீட்டருக்கான பின்னோக்கி நீந்தும் (BACKSTROKE) பிரிவில், பங்கு பெறும் இவர், 2 வயது முதல் இலண்டனில் வளர்ந்தவர். நேப்பாள நாட்டின் நீச்சல் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக, கடந்த ஆண்டு ஏப்ரலில் இவர் நேப்பாளத் தலைநகர் காட்மாண்டு வந்தபோதுதான், அந்நகரை மிக மோசமான, வரலாறு காணாத பூகம்பம் தாக்கியது. அந்த பூகம்பத்தின்போது ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்ட அனுபவமும் இவருக்குண்டு.
ஒலிம்பிக்சில் தகுதிச் சுற்றுக்கான போட்டிகளில் (heats) கலந்து கொண்டபோது, நீச்சலுடையை இழுத்து விடும்போது, இவரது நகம் பட்டு, நீச்சலுடையில் கிழிசல் ஏற்பட்டு விட என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியிருக்கின்றார். பின்னர் இலண்டனில் உள்ள தனது பயிற்சியாளரை அழைத்து, ஆலோசனைகள் பெற்று, தனது நீச்சலுடையை மாற்றிக் கொண்டு மீண்டும் போட்டியில் இறங்கினாராம்.
ஆனாலும், இவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. “இருப்பினும் ஒலிம்பிக்சில் மிக இளவயது போட்டியாளராகப் பங்கு பெற்றதும் அங்கு நான் நீச்சல் உலகின் எனது ஆதர்ச கனவு நாயகர்களைச் சந்தித்ததும், நான் பங்கு பெற்று முடிந்ததும், எனது பெயரும், நான் எத்தனை நிமிடங்களில் போட்டியை முடித்தேன் என்ற நேரக் கணக்கு திரையில் தோன்றியதும் என்னால் எப்போதும் மறக்க முடியாத நினைவுகள்” எனக் கூறியிருக்கின்றார் கௌரிகா சிங்.