Home Featured கலையுலகம் பஞ்சு அருணாசலம் : சில நினைவுகள் – சில தகவல்கள்!

பஞ்சு அருணாசலம் : சில நினைவுகள் – சில தகவல்கள்!

1859
0
SHARE
Ad

panchu-arunasalam-decd

சென்னை – கடந்த புதன்கிழமை (10 ஆகஸ்ட் 2016) காலமான பஞ்சு அருணாசலம், திரைப்படப் பாடலாசிரியர்- திரைக்கதை வசனகர்த்தா – தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். பஞ்சு அருணாசலத்தின் இறுதிச் சடங்குகள் அடுத்த நாள் வியாழக்கிழமை நடைபெற்று அன்று மாலை அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

அவரைப் பற்றிய சில நினைவுகள் – சில தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.

  • கண்ணதாசனின் சகோதரரின் மகனான பஞ்சு அருணாசலம் பள்ளிக் கல்வியை முழுமையாக முடிக்காவிட்டாலும், நல்ல தமிழ்ப் புலமையும் கவிதை எழுதும் ஆற்றலும் கொண்டிருந்தார். அதன் காரணமாக, எழுத்துப் பணியில் ஈடுபட விரும்பி சென்னை வந்த அவர் கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
  • பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தானே பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். சிறந்த இலக்கிய நயம் கொண்ட பல பாடல்களை அவர் எழுதியிருக்கின்றார். அதில் சிலவற்றை கண்ணதாசன் எழுதியது என்றே இன்றும் பலர் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
  • உதாரணத்திற்கு சில பாடல்கள் – “பொன்னெழில் பூத்தது புதுவானில்” (கலங்கரை விளக்கம்); “பூப்போல பூப்போல பிறக்கும்” (நானும் ஒரு பெண்), “மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே” (மாப்பிள்ளை); இவ்வாறாக பல இலக்கியத் தரம் கொண்ட பாடல்களைத் தந்தவர் பஞ்சு.
  • இவர் எழுதிய முதல் பாடல் “நானும் மனிதன்தான்” என்ற பாடலாகும். 1960ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.
  • எல்லாக் காலத்திலும் தமிழர்களின் திருமண இல்லங்களில் ஒலிக்கும் – ஒலிக்கப் போகும், “மணமகளே, மருமகளே வா! வா! உனது வலது காலை எடுத்து வைத்து வா! வா!” என்ற இறவாப் பாடலுக்கு சொந்தக்காரர் பஞ்சு. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த ‘சாரதா’ படத்தில் இடம் பெற்றது இப்பாடல்.
#TamilSchoolmychoice

ilayaraja-annakili-song recording

அன்னக்கிளி படத்தின் பாடல் பதிவின் போது பஞ்சு அருணாசலம் (நடுவில்), படத்தின் கதாசிரியர் செல்வராஜ், இளையராஜா..

  • பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய ‘அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் அனைத்தும் இவர் எழுதியதுதான்.
  • அண்மைய சில வாரங்களாக, ஆனந்த விகடன் வார இதழில் “திரைத் தொண்டர்” என்ற தலைப்பில், தனது திரையுலக அனுபவங்களைத் தொடராக , சுவைபட எழுதி வந்தார். ஆனால், அந்தத் தொடர் நிறைவு பெறுவதற்கு முன்னரே அவர் பிரிந்தது, தமிழுக்கு ஏற்பட்ட இழப்பு என்றுதான் கூறவேண்டும்.
  • கண்ணதாசனுக்கு உதவியாளர் என்ற அறிமுகம் – அனுபவம், இவற்றைக் கொண்டு, சில தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கதை சொல்லத் தொடங்கினார் பஞ்சு. ஆனால், ஆரம்ப காலங்களில் இவர் கதை-திரைக்கதை எழுதிய பல படங்கள் பாதியிலேயே பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட, அதன் காரணமாக தான் “பாதிக் கதை பஞ்சு” எனக் கிண்டலாக திரையுலகத்தினரால் அழைக்கப்பட்டதாக தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
  • பஞ்சு அருணாசலத்தின் திரையுலகப் பங்களிப்பை விடப் பெரிதாகப் பேசப்படுவது அவர் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் என்பதுதான். அன்னக்கிளி வெள்ளிவிழா கொண்டாடியதும், இன்றுவரை ஆயிரம் படங்களைத் தாண்டி, தனிப் பெரும் இசை ஆளுமையாக இளையராஜா தொடர்ந்து கொண்டிருப்பதும், தமிழ்த் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பக்கங்கள்.
  • இளையராஜா முதன் முதலாக அன்னக்கிளி படப் பாடலுக்கு இசைக் கோர்ப்பு பணி மேற்கொண்ட போது விளக்குகள் அணைந்துவிட, அதை அபசகுனம் என்று கூறி பலர், இளையராஜா வேண்டாம் எனத் தன்னிடம் வற்புறுத்தியதாகவும், இளையராஜாவே மனம் தளர்ந்து விட்டதாகவும் – இருப்பினும் அவரது இசை மீது அபார நம்பிக்கை கொண்டு, அந்தப் பாடல்களுக்கு அவரது இசைதான் பொருத்தமாக இருக்கும் எனக் கூறி அவரையே தொடர்ந்து அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராகத் தொடரச் செய்ததாகவும், தனது திரைத் தொண்டர் தொடர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் பஞ்சு.
  • பின்னர் பல படங்களுக்கு கதை-திரைக்கதை ஆசிரியராகப் புகழ் பெற்றவர், பல படங்களைத் தயாரித்தார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.
  • இவரது மகன் சுப்பு தற்போது பல படங்களில் சிறந்த குணசித்திர நடிகராகவும், பின்னணிக் குரல் (டப்பிங்) கலைஞராகவும் உருவெடுத்து வருகின்றார்.
– இரா.முத்தரசன்