கோலாலம்பூர் – முஸ்லீம் குடும்பத்தினர் முஸ்லீம் அல்லாத வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என குடிநுழைவுத் துறை கட்டுப்பாடு விதித்திருப்பதாக எழுந்த சர்ச்சைகள் குறித்து இந்த இலாகாவின் தலைமை இயக்குநர் முஸ்தாபார் அலி (படம்) விளக்கம் தந்துள்ளார்.
அது குறித்து தான் எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தான் தலைமை இயக்குநர் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே அத்தகைய நடைமுறை ஒன்று நடப்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டிய ஆலோசனை மட்டுமே என்று கூறிய முஸ்தாபார் அலி, முஸ்லீம் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் முஸ்லீம் அல்லாத பணிப் பெண்களை பணிக்கு அமர்த்த குடிநுழைவுத் துறை சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்த நடைமுறை ஏற்கனவே இருக்கின்ற நடைமுறைதான் என்றும் புதிய விதிமுறை அல்ல என்றும், குடிநுழைவுத் துறை இந்த விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளும் என்றும் முஸ்தாபார் அலி தெரிவித்துள்ளார்.