கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பழனிவேல் தரப்பினரின் சில முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசியக் கூட்டம் நடைபெற்று அதன்படி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த முடிவுகளின்படி, தற்போது மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் டத்தோ சோதிநாதனுக்கு எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதற்கும், எடுக்கப்படும் முடிவுகள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இணக்கத்தோடும், ஒப்புதலோடும் எடுக்கப்பட வேண்டும் எனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டத்தில் டத்தோ சோதிநாதன், டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் (படம்) ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
மீண்டும் பழனிவேல் தரப்பினர் மஇகாவுக்குத் திரும்புவது தொடர்பில் சுப்ராவுடன் தான் சந்திப்புகள் நடத்தியிருப்பதாக கூட்டத்தில் சோதிநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் கூட்டத்தில் பேசிய கூட்டத்தில் பேசிய சோதிநாதன், “அனைவரின் அனுமதியோடுதான் நான் சுப்ராவுடன் கட்சி நலனுக்காகவும், நமது தரப்பு கிளைகளின் நலனுக்காகவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றேன். இந்நிலையில் நமக்குள்ளேயே ஒருசிலர் பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை என்று வெளியில் சென்று கூறுவதும், புதிய கட்சி தொடங்குகின்றோம் என்று கூறி வருவதும் நமது பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக இருக்கின்றது. எனவே, அனைவரும் ஒருமித்து இணைந்து செயல்படுவதாக இருந்தால் மட்டுமே நான் பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட முடியும்” என உறுதிபடத் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமான முடிவு காண எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை சோதிநாதனுக்கு கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டத்தினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பழனிவேல் தரப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் நேற்றைய கூட்டத்தின் முடிவுகள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி விளக்கங்கள் வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் 1 முதல் மீண்டும் கட்சிக்கு வெளியில் நிற்கும் கிளைகள் சந்தாப் பணம் செலுத்தி, வேட்புமனுத் தாக்கல் செய்ய மஇகா தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.