Home Featured கலையுலகம் “என் வீட்டுத் தோட்டத்தில்” – திரைப்படம் பற்றிய சுவாரசியத் தகவல்கள்!

“என் வீட்டுத் தோட்டத்தில்” – திரைப்படம் பற்றிய சுவாரசியத் தகவல்கள்!

1622
0
SHARE
Ad

EVT1கோலாலம்பூர் – இவ்வாண்டில் மலேசிய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் மலேசியத் திரைப்படங்களில், கார்த்திக் ‌‌ஷாமளன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “என் வீட்டுத் தோட்டத்தில்” திரைப்படமும் ஒன்று.

ஏற்கனவே, கடந்த 2013-ம் ஆண்டில், “மெல்லத் திறந்தது கதவு” என்ற திரைப்படத்தின் மூலமாக, மலேசிய ரசிகர்களுக்கு புதுவிதமான திகில் நிறைந்த சினிமா அனுபவத்தைக் கொடுத்தவரின், அடுத்த திகில் படைப்பு தான், “என் வீட்டுத் தோட்டத்தில்”.

அண்மையில், வெளியான அதன் முன்னோட்டத்தைப் பார்த்த பலர், அது உண்மையில் மலேசியத் திரைப்படம் தானா? அல்லது ஹாலிவுட் திரைப்படமா? என்று யோசிக்கும் அளவு அதன் தரமும், திகில் நிறைந்த காட்சிகளும் ரசிகர்களை மிரட்டியது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி அண்மையில், படக்குழுவினருக்கும், படத்துடன் தொடர்புடைய சில முக்கியப் பிரமுகர்களுக்கும் திரையிட்டுக் காட்டப்பட்டது.

படம் பார்த்தவர்கள் அனைவருமே, இத்திரைப்படத்தின் உருவாக்கத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டதோடு, நிச்சயம் மலேசிய ரசிகர்களுக்கு ஹாலிவுட்டுக்கு நிகரான மிரட்டல் அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது என்று பாராட்டியுள்ளனர்.

நடிகர் சி.கே, நடிகர் சசிதரன், எழுத்தாளர் விஜயராணி செல்லப்பப்பா, இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம், ஒளிப்பதிவாளர் சத்தீஸ் நடராஜன் உள்ளிட்ட கலைஞர்கள் படம் குறித்து மிகவும் பாராட்டி தங்களது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

கதைக்களம்

EVT5இத்திரைப்படம் ‘சைக்கோ’ திரில்லர் என்று சொல்லக்கூடிய, மனநோயால் சிக்கிய கொலைகாரன் ஒருவனின் கொடூரச் செயல்களை அடிப்படையாகக் கொண்டது. அவனிடம் சிக்குபவர்கள் யார்? அவர்களுக்கு நேரும் கதி என்ன? அவனது மனநோய்கான பின்னணி காரணம் என்ன? அவனைக் கண்டறிய போலீஸ் துப்பறியும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மையப்படுத்தி தான் கதை நகர்கிறது.

தொடக்கத்தில் இருந்து முடிவு வரை விறுவிறுப்பாக பல முடிச்சுகளோடு நகரும் திரைக்கதை, இறுதிக் காட்சியில் ஒரு பாடலின் மூலம் அம்முடிச்சுகளை அவழ்த்து படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்துவிடுகின்றது.

இறுதியில் சொல்லப்படும் முடிவு, யாரும் எதிர்பார்த்திடாத வகையில் அமைந்திருப்பது தான் இத்திரைப்படத்தின் தனிச்சிறப்பு.

நடிப்பு

நடிப்பு என்று சொல்வதை விட அக்கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கார்த்திக் ‌‌ஷாமளனின் ஆஸ்தான நடிகை ஜெயா கணேசன் தான் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

EVT4காது கேட்க முடியாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அவர் படம் முழுவதும் வசனங்கள் இன்றி சைகையின் மூலமாகவே உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, மிகவும் அனுபவம் வாய்ந்த கலைஞர்களே அது போன்ற சவாலான கதாப்பாத்திரங்களைச் செய்யத் தயங்கும் நிலையில், ஜெயா கணேசன் அக்கதாப்பாத்திரத்தில் அவர்களுக்கு நிகராக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

EVT6உதாரணமாக, காட்சி ஒன்றில்… காதலனிடம் அவர் தனது காதலை சைகையால் வெளிப்படுத்த வேண்டும்… அப்பப்பா.. எவ்வளவு அழகாக நடித்திருக்கிறார் .. அதோடு, திகில் காட்சிகளில் அவரது நடிப்பும், அச்சத்தை முகத்தில் வெளிப்படுத்தியிருக்கும் பாவணைகளும், நிச்சயமாக அவரது நடிப்பிற்கு அனைத்துலக விருதே கிடைக்கும்.

அடுத்ததாக.. நடிகர் கே.எஸ்.மணியத்தை இத்தனை ஆண்டுகளில், தொலைக்காட்சி நாடகங்களிலும், தொலைக்காட்சிப் படங்களிலும், திரைப்படங்களிலும் எத்தனையோ விதமான கதாப்பாத்திரங்களில் பார்த்திருப்போம். ஆனால் அவற்றில் இல்லாத ஒரு வித்தியாசமான மாறுபட்ட கதாப்பாத்திரம் இப்படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாம்பு ஒன்றுடன் அவர் போராடும் காட்சிக்காகவே அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். விஷமுள்ள அந்தக் கொடிய பாம்புடன் அவர் துணிச்சலாக நடித்திருப்பதை படக்குழுவினரே ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

EVTகதாநாயகனாக மோகன ராஜ் நடித்துள்ளார். காதல் காட்சிகளில் அவரது நடிப்பும், உடல்மொழியும் மிகவும் ஈர்க்கின்றது.

மேலும், காவல்துறை அதிகாரிகளாக ‘மறவன்’ புகழ் ஹரிதாஸ், மகேசன் பூபாலன், யுகேந்திரன் மணியம், யோதேஸ்ரி சண்முகம், விக்கினேஸ் பிரபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஹரிதாஸ், மகேசன் பூபாலனின் அந்த மிடுக்கும், ஸ்டைலும் தனி அழகு.

EVT3முன்னோட்டத்தில் வரும்,  “ஹவ் டூ யூ ஃபீல் நவ்?” என்ற வசனம் இடம்பெறும் காட்சி நிச்சயம் ரசிக்க வைக்கும்.

இவர்கள் தவிர இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சைக்கோ’ கதாப்பாத்திரம், படம் பார்த்துவிட்டு வந்து இரண்டு நாட்களுக்கு மனதை விட்டு நீங்கவில்லை . ‘ஊஊஊஊ’ என அக்கதாப்பாத்திரம் ஊளையிடும் ஓசை காதைவிட்டு நீங்க கொஞ்ச காலம் ஆகும்.

இத்திரைப்படத்தில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், 70 சதவிகிதம் வசனமே இல்லாமல் காட்சிகள் மூலமாகவே கதையை நகர்த்தியிருக்கும் விதம் தான்.

ஒளிப்பதிவு, இசை

இக்கதைக்கு பக்க பலம் சேர்த்துள்ள இரண்டு முக்கிய அம்சங்களில் ஒளிப்பதிவும், பின்னணி இசையையும் சொல்லியே ஆக வேண்டும்.

கதை நகரும் சூழலுக்கு ஏற்ற வண்ணத்தில் அதன் ஒளிப்பதிவு செய்திருப்பது, படம் பார்க்கும் ரசிகர்களை தொடக்கத்தில் இருந்தே அந்தத் திகில் மனநிலைக்குள் கொண்டு வந்துவிடுகின்றது. அந்த வகையில் வி.ஜி.ரவின் மனோகரனின் ஒளிப்பதிவு மிகவும் பாராட்டும் வகையில் உள்ளது. அவருக்குத் துணையாக சங்கர் இந்திராவின் படத்தொகுப்பு குழப்பமின்றி காட்சிகளை இணைந்திருக்கிறது.

EVT9இசை.. படத்தின் இன்னொரு அசுரன் என்று சொல்லலாம். காட்சிக்குக் காட்சி அதிரச் செய்யும் ஷமேசன் மணிமாறனின் பின்னணி இசை, படம் தொடங்கியது முதல் முடிவு வரை மிரட்டுகிறது. அதோடு படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களும் மிகவும் சிறப்பு.

கதாநாயகியின் நிலையையும், கதாநாயகனின் அன்பையும் சொல்லும் வகையில், யுவாஜி வரிகளில், தமிழகப் பாடகர் பிரசன்னா குரலில்,  “ஒலி விழா” பாடலும், ஃபீனிக்ஸ்தாசன் வரிகளில், சரேஸ் டி செவன், பிரியசகிராஜ் குரலில் அச்சத்தையும், அதிலிருந்து மீள்வது பற்றிச் சொல்லும் படத்தின் கடைசிப் பாடலும், அதன் காட்சியமைப்புகளும் அருமை.

யாருக்கான படம்?

EVT 7நிச்சயமாக இது சராசரிப் படம் கிடையாது. ரோலர்கோஸ்டர் அனுபவம் என்று சொல்லுவார்களே அது போல், படத்தில் பல இடங்களில் திகிலும், ஆசுவாசப்படுத்த சில காட்சிகளும், காதலாகி கசிந்துருக சில காட்சிகளும் என முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும்.

படத்தலைப்பின் வடிவமைப்பில் (Design) தொடங்கி, கேமரா தொழில்நுட்பம், காட்சிப் பதிவு செய்யப்பட்டுள்ள இடங்கள், செட்கள் எனப் பலவற்றையும் பார்த்துப் பார்த்து நுணுக்கமாகச் செய்துள்ளார்கள். படத்தில் இடம்பெறும் வீடு ஒன்றிற்காக மாதக்கணக்கில் அதற்கென ஒரு செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படக்குழுவினரின் கடும் உழைப்பை அதனைப் படம் பார்க்கும் போது உணரலாம்.

குறைந்த பட்ஜட்டில் அனைத்துலகத் தரத்தை எட்டியுள்ள இத்திரைப்படம் மிக விரைவில் மலேசியத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மலேசியச் சூழலை அடிப்படையாகக் கொண்ட ஹாலிவுட் தரத்திலான திரைப்படமான, ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ தரவிருக்கும் திகில் அனுபவத்தை அனுபவிக்கத் தயாராகிக் கொள்ளுங்கள் ரசிகர்களே!

இத்திரைப்படம் குறித்த மேல்விவரங்களுக்கு https://www.facebook.com/EVTthemovie/ என்ற பேஸ்புக் பக்கத்தை வலம் வரலாம்.

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ திரைப்பட முன்னோட்டம்:-