Home Featured உலகம் “9 தங்க மகன்” உசேன் போல்ட் சாதனையை இனி முறியடிக்க முடியுமா?

“9 தங்க மகன்” உசேன் போல்ட் சாதனையை இனி முறியடிக்க முடியுமா?

1587
0
SHARE
Ad

olympics-200m-usain bolt-

ரியோ டி ஜெனிரோ – இந்த 2016 ஒலிம்பிக்சின் கதாநாயகன் – அனைத்துலக அளவில் யாராலும் மறக்க முடியாத தனிநபர் விளையாட்டாளர் – யார் என்று பார்த்தால் நிச்சயம் அது உசேன் போல்ட் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

நேற்று நடைபெற்ற 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா குழுவை வெற்றிவாகை சூட வைத்ததில் முக்கிய பங்கு வகித்த போல்ட், அதற்காகத் தனது குழுவினரோடு பெற்ற தங்கத்தோடு சேர்த்து இதுவரை 9 தங்கப் பதக்கங்களை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

oympics- 200m-usain-bolt-

200 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் வெற்றி  வாகை சூடிய போது..

2016 ஒலிம்பிக்சில் மட்டும் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள உசேன் போல்ட் பார்க்கப்படுவது எத்தனை பதக்கங்களைப் பெற்றுள்ளார் என்பதை வைத்து அல்ல! அவரை விட அதிகமான தங்கப் பதக்கங்களை நீச்சலில் மைக்கல் பெல்ப்ஸ் பெற்றிருக்கின்றார்.

ஆனால், ஓட்டப் பந்தயப் போட்டிகளில் வரிசையாக மூன்று ஒலிம்பிக்சில் (2008, 2012, 2016) 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிகளில் தங்கம் பெற்ற உசேன் போல்ட்டின் சாதனையை இனி மீண்டும் ஒருவர் சாதிக்க முடியுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி!

இங்குதான் தனித்து நிற்கின்றார் போல்ட்!

olympics-usain bolt-jamaica-4 x 100m

4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற ஜமைக்கா குழுவினர்….

நாளை ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் நிறைவு பெறும் ஒலிம்பிக்ஸ், போல்ட்டுக்கும் மறக்க முடியாத நாளாகும். காரணம், இதுதான், ஒரு விளையாட்டாளராக அவர் பங்கு பெறும் கடைசி ஒலிம்பிக்ஸ் என்பதோடு, ஆகஸ்ட் 21-தான் போல்ட்டின் பிறந்த நாள் என்பது அந்த நாளின் இன்னொரு கூடுதல் சிறப்பு.

உலகின் முதலாம் நிலை ஓட்டக்காரர் – ஒலிம்பிக்சில் தங்கங்களை வாரிக் குவிப்பவர் –  என்றாலும்,

நாளையோடு 30 வயது நிறைவு பெறும் போல்ட் வழக்கமாக எல்லா ஆண்களும் அந்த வயதில் தங்கள் வீடுகளில் எதிர்நோக்கும் அதே பிரச்சனையைத்தான் எதிர்நோக்குகின்றார்.

போல்ட்  தங்கங்களை வாரிக் குவித்துக் கொண்டிருப்பது குறித்து அவரது தாயாரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர் “என் மகன் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என கூறியிருப்பதிலிருந்து போல்ட்டின் 30-வயது பிரச்சனை என்னவென்று இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

Olympics-jamaica 4 x 100m team -usain Bolt-

இந்த ஒலிம்பிக்சோடு ஓட்டப் பந்தயத்துக்கு விடை கொடுக்கும் போல்ட் தனது ஜமைக்கா குழுவினருடன்…

ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தய சாதனையாளர்கள்

ஒலிம்பிக்‌ஸ் ஓட்டப் பந்தய சாதனைகள் என்று வரும்போது அனைவரும் சாதனையாளராகக் குறிப்பிடுவது ஜெஸ்ஸி ஓவன்ஸ் என்ற கறுப்பின அமெரிக்கரைத்தான். 1936-இல் ஜெர்மனி, பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக்சில் 100, 200 மீட்டர், நீண்ட தூரம் தாண்டுதல், 100 மீட்டர் குழு தொடர் ஓட்டம் என நான்கு போட்டிகளில் வரிசையாக தங்கம் வென்ற சாதனையைப் புரிந்தவர் ஜெஸ்ஸி ஓவன்ஸ்.

அதற்குப் பின்னர் யாராலும் முறியடிக்க முடியாத அந்த சாதனையை முறியடிக்க 48 ஆண்டுகள் காத்திருந்தது ஒலிம்பிக்ஸ் விளையாட்டு உலகம்!

அத்தனை ஆண்டுகள் கழித்து அந்த சாதனையை முறியடித்தவர் – அல்லது சமன் செய்தவர் – மற்றொரு அமெரிக்க கறுப்பின ஓட்டப்பந்தய விளையாட்டாளரான கார்ல் லூயிஸ்.

1984 ஒலிம்பிக்சில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் 1936-இல் புரிந்த சாதனைக்கு இணையாக, 100 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் குழு தொடர் ஓட்டம், நீண்ட தூரம் தாண்டுதல் என நான்கு போட்டிகளிலும் தங்கம் வென்றார் கார்ல் லூயிஸ்.

ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் இதுவரை 9 தங்கம் பெற்ற கார்ல் லூயிஸ் ஒரு சானையாளராகக் கருதப்பட்டவர். அவரது சாதனையைத் தற்போது சமன்படுத்தியுள்ளார் உசேன் போல்ட்.

கார்ல் லூயிஸ் போலவே 9 தங்கங்களை இதுவரை ஒலிம்பிக்சில்  பெற்றுவிட்டார் உசேன் போல்ட்.

ஆனால், உசேன் போல்ட் போன்று 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிகளில் வரிசையாக மூன்று ஒலிம்பிக்சிலும் ஓடி, தங்கப் பதக்கம் வெல்ல இனி ஒருவரால் முடியுமா?

அல்லது அந்த சாதனையை இன்னொருவரால் இனி முறியடிக்க முடியுமா?

என்பதுதான் அடுத்து வரும் பல்லாண்டுகளுக்கு விளையாட்டுலகம் கேட்டுக் கொண்டிருக்கப் போகும் கேள்விகள்!

பொதுவாக ஒலிம்பிக்ஸ் இறுதிச் சுற்றில் கலந்து கொள்ளும் அனைத்து விளையாட்டாளர்களும் சிறப்பான திறன் கொண்டவர்கள் என்பதால், ஒருவருக்கொருவர் சில வினாடிகளில்தான் வெற்றி பெறுவார்கள்.

ஆனால், நேற்று வெள்ளிக்கிழமை உசேன் போல்ட் 200 மீட்டர் ஓடி வெற்றி பெற்றதைத் தொலைக்காட்சியில் கண்டு களித்தவர்கள் ஒன்றை கவனித்திருப்பார்கள். போல்ட்டுக்கு இரண்டாவதாக ஓடி வந்த கனடா நாட்டின் டி கிராசே என்பவருக்கும் போல்ட்டுக்கும் இடையில் அவ்வளவு பெரிய இடைவெளி வித்தியாசம் இருந்தது.

அத்தகைய ஒரு மாபெரும் இடைவெளியை ஒலிம்பிக் வரலாற்றிலும், விளையாட்டுத் துறையிலும் ஏற்படுத்தி விட்டுத்தான் உசேன் போல்ட்டும் ஒலிம்பிக்சில் இருந்து விடை பெறுகின்றார்!

-இரா.முத்தரசன்