ரியோ டி ஜெனிரோ – 2008, 2012 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இரண்டிலும் தங்கம் பதக்கம் பெற்றவர் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் சீனாவின் லின் டான். இந்த இரண்டு ஒலிம்பிக்சின் இறுதி ஆட்டங்களிலும் அவர் தோற்கடித்தது நமது மலேசியாவின் லீ சோய் வெய்யைத்தான்!
ஆனால், இந்த ஆண்டு ஒலிம்பிக்சில் அரை இறுதி ஆட்டத்தில் லின் டானைத் தோற்கடித்து பழி தீர்த்துக் கொண்டார் லீ சோங் வெய். இருந்தாலும் இறுதி ஆட்டத்தில் மற்றொரு சீன விளையாட்டாளர் சென் லோங் என்பவரிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றார் லீ சோங் வெய்.
ஆனால், குறைந்தது வெண்கலப் பதக்கம் மட்டுமாவது பெற்று இல்லம் திரும்பலாம் என்ற முடிவோடு, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பூப்பந்து ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் லின் டான், டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் என்பவரோடு மோதினார்.
ஆனால் இதிலும் தோல்வியடைந்துள்ளார் லின் டான். மூன்றாவது இடத்திற்கான போட்டியில் விக்டர் அக்செல்சன் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து முதல் இரண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் பெற்று, சாதனை படைத்த லின் டான் இந்த முறை வெறுங் கையோடு, நாடு திரும்புகின்றார்.