புதுடில்லி – பதவி விலகிச் செல்லும் இந்திய மத்திய வங்கி (ரிசர்வ் பேங்க்) ஆளுநர் (கவர்னர்) ரகுராம் ராஜனுக்குப் பதிலாக, நடப்பு துணை ஆளுநர்களில் ஒருவரான உர்ஜித் பட்டேல் அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரகுராம் ராஜனின் துணை ஆளுநர்களில் ஒருவராகவும், தலைமை வியூகவாதியாகவும் திகழ்ந்த உர்ஜித், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொருத்தமான தேர்வு என்றும் இந்திய வணிக வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
மிகச் சிறப்பான கல்வித் தகுதிகளைக் கொண்டவர் பட்டேல். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டேல், அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக் கழகத்தில் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றவராவார்.
ரகுராம் ராஜனைப் போலவே, அனைத்துலக நிதி மையத்தில் (International Monetary Fund) பணியாற்றிய அனுபவம் கொண்டவர் பட்டேல்.
ரகுராம் ராஜனைப் போன்ற ஈர்க்கும் கவர்ச்சி இல்லாதவர் என்றாலும் பட்டேல், தனது தகுதிகள், அனைத்துலக அனுபவம், நடப்பு மத்திய வங்கி துணை ஆளுநர் பதவியின் மூலம் கிடைத்த அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மிகச் சிறப்பாக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.