கோலாலம்பூர் – ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், தாங்கள் பெற்ற பதக்கத்தைக் கடித்தபடி, புகைப்படங்களில் தெரிவார்கள்.
அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது.
பொதுவாக, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் தங்கப்பதக்கங்கள் உண்மையான தங்கத்தால் ஆனது அல்ல. சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அதில் 494 கிராம் சில்வரும், 6 கிராம் மட்டுமே தங்கமும் உள்ளது.
இந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட்ட தங்கப் பதக்கங்களில் கூட 1.2% தங்கம் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 1912-ம் ஆண்டு தொடங்கி உண்மையான தங்கத்தால் ஆன பதக்கங்கள் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலும் அதில் சில்வர் மற்றும் காப்பர் கலந்திருக்கும்.
ஆகவே, அந்தக் காலத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட தங்கம் உண்மையானது தானா? என்பதை சோதிக்கவே வீரர்கள் அவ்வாறு கடித்துப் பார்க்கும் பழக்கத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
உண்மையான தங்கம் என்பது மிகவும் இலகுவானது என்பதால், அதனைக் கடித்துப் பார்த்தால் பற்களின் அச்சு அதில் பதிந்து இருக்கும். கலப்படமான தங்கம் என்றால், பற்களின் அச்சு அதில் இருக்காது.
இப்படித்தான், கடந்த 2010-ஆம் ஆண்டு நடத்த ஒலிம்பிக் போட்டியில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் டேவிட் மொலெர், ஆர்வ மிகுதியில் தான் பெற்ற சில்வர் பதக்கத்தை சற்று வேகமாகவே கடித்துவிட, பல் ஒன்று உடைந்து போன வரலாறும் உள்ளது.