Home Featured நாடு ஏழை மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது கபாலி – முன்னாள் கேங்ஸ்டர் கருத்து!

ஏழை மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது கபாலி – முன்னாள் கேங்ஸ்டர் கருத்து!

764
0
SHARE
Ad

kabali1கோலாலம்பூர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், மலேசியாவைக் கதைக்களமாகக் கொண்ட திரைப்படமான ‘கபாலி’-ல் 70 சதவிகிதம், மலேசியாவில் குறைந்த வருமானத்தில் வாழும் இந்தியக் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் ‘கருப்பு மற்றும் வன்முறை’ பக்கங்கள் காட்டப்பட்டிருப்பதாக முன்னாள் குண்டர் கும்பல் உறுப்பினரான ஏ.முரளி தெரிவித்துள்ளார்.

தற்போது ‘தமிழன் உதவும் கரங்கள்’ என்ற அரசு சாரா இயக்கம் ஒன்றில் தலைவராக இருக்கும் அவர், கடந்த 1992-ம் ஆண்டு, செலாயாங் ஈரச் சந்தையில், வர்த்தகர் ஒருவரைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்.

ஏழை மற்றும் இயலாத நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான் எளிதில், குற்ற உலகில் நுழைகிறார்கள் என்று முரளி கூறுகின்றார்.

#TamilSchoolmychoice

“பெரும்பாலான கேங்ஸ்டர்கள் உடைந்த குடும்பங்களில் இருந்து தான் வருகின்றார்கள். வாழ்வதற்காக என்ன செய்வதென்று தெரியாமல், எப்போதும் கோபமும், விரக்தியுமாக அவர்கள் இருக்கிறார்கள். என்ஜிஓ-க்களோ அல்லது அரசாங்கமோ அது போன்ற இளைஞர்களை அவர்கள் நான்காம் படிவத்தின் போதே கண்டறிந்து, முறையாக வழிகாட்டி, அவர்கள் ஐந்தாம் படிவம் முடிக்கும் வரை பாதுகாக்க வேண்டும்” என்று முரளி நேற்று வியாழக்கிழமை கேஐடிஏ (Institute of Ethnic Studies) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, “கபாலி – கட்டுக்கதையா? அல்லது உண்மையா?, வரலாறா? அல்லது கற்பனையா?” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.

என்ன செய்யலாம்?

இது போன்று ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் குண்டர் கும்பல்களில் இணையாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதற்கு அவர் மூன்று வழிகளைச் சொல்கிறார்.

முதலில், “அதிக ஆபத்தான” பகுதிகளில் இருக்கும் இளைஞர்களை காவல்துறையில் இணையுங்கள். இரண்டாவது, மலேசிய இந்திய இளைஞர்கள் பாதுகாவலர்களாகப் பணியாற்ற அவர்களுக்கு 500 ரிங்கிட்டிற்கும் மேல் ஊதியம் வழங்குங்கள், மூன்றாவது, அவர்கள் சிறுதொழில் செய்ய சிறிய அளவிலான கடன் கொடுங்கள் என்று முரளி பரிந்துரைந்துள்ளார்.

“மலாய் பாடத்தில் கிரெடிட் எடுக்காதவர்களும், காவல்துறையில், கீழ்மட்டப் பணிகளில் இணைய முடியும். தொடக்கமாக,  “அதிக ஆபத்தான” பகுதிகளில் வசிக்கும் 5,000 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, 10 ஆண்டுகளாக, காவல்துறையில் இணைத்து வந்தால், 50,000 இளைஞர்கள் குண்டர் கும்பல்களில் இணைவதைத் தடுக்க முடியும்” என்று முரளி தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த 10 ஆண்டுகளில், தற்போது குண்டர் கும்பல்களில் இருப்பவர்களுக்கு வயதாகிவிடும், அதோடு, இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பல்களில் இணைவது அதிகளவு குறைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, தற்போது காவலர் பணிகளுக்கு நேபாளத்தில் இருந்து பாதுகாவலர்களைக் கொண்டு வரும் அரசு, இங்குள்ள இளைஞர்களையும் 500 ரிங்கிட்டுக்கும் மேல் வருமானம் கொடுத்துப் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் முரளி வலியுறுத்தியுள்ளார்.

தற்போது சிறையில் இருக்கும் பல குண்டர்களின் குடும்பங்கள் இயலாமையில் வாடுகிறார்கள் என்று குறிப்பிடும் முரளி, அவர்கள் வறுமையான சூழலில் இருந்து மீள முடியாமல் மீண்டும் குண்டர் கும்பல்களிலேயே சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இக்கருத்தரங்கில், மலேசியாவிலுள்ள பல அரசு சாரா இந்திய இயக்கங்களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டு கபாலி திரைப்படம் குறித்தத் தங்களது பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட கிள்ளான் மைஸ்கில்ஸ் கல்லூரியின் நிர்வாகி வழக்கறிஞர் எஸ்பி பதி கூறுகையில், இந்திய இளைஞர்கள் தான் அதிக ஆபத்தில் இருக்கிறார்கள். இனியும் இந்திய இளைஞர்களுக்கு மத்தியில் உள்ள குண்டர் கும்பல் நடவடிக்கைகளை அலட்சியம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

“என்னுடைய இளமைக் காலத்தில், எனது கிராமத்தில் சில குண்டர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 50 லிருந்து 60 இளைஞர்கள் ஒரு கும்பலில் உள்ளார்கள். இது என்னுடைய பகுதியில் மட்டும். மற்ற பகுதிகளில் எப்படி? நாம் இந்தப் பிரச்சினையைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றால், அது நம் கையைவிட்டுப் போய்விடும்” என்று எஸ்பி பதி கூறியுள்ளதாக எஃப்எம்டி செய்தி வெளியிட்டுள்ளது.