புத்ராஜெயா – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 1 பில்லியன் ரிங்கிட் இருந்தது என்பதை மொகிதின் யாசின் நிரூபிக்கட்டும் என நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சாஹிட், “அவரிடம் ஆதாரம் இருந்தால் நிரூபிக்கச் சொல்லுங்கள். நமது பிரதமரை அவர் குற்றம் சாட்டுகிறார். அவர் ஆதாரத்தைக் காட்ட வேண்டும். கூற்றுகளின் அடிப்படையில் குற்றம் சாட்டக்கூடாது” என்று சாஹிட் தெரிவித்துள்ளார்.
நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் இருந்ததாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியதற்கு முன்பே 1 பில்லியன் ரிங்கிட் அவரது வங்கிக் கணக்கில் இருந்தது தனக்குத் தெரியும் என முன்னாள் துணைப்பிரதமரான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
‘அரபு நன்கொடை’ விவகாரத்திற்கு முன்பாகவே தனக்கு அது பற்றி தலைமை வழக்கறிஞர் அப்துல் கானி பட்டேல் மூலமாகத் தெரியும் என்றும் மொகிதின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.