கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் இப்ராகிம் சாஹிப் அன்சார், சில தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், இந்த வன்முறைச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
“குற்றம் புரிந்தவர்களை அடையாளம் காணவும், விசாரணை நடத்தவும், கோலாலம்பூரில் இருக்கும் இலங்கைத் தூதர், மலேசியாவிலுள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு அளித்து வருகின்றார்.”
“தூதரகம் மூலமாக, இலங்கை வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, நாடு திரும்ப, கோலாலம்பூர் விமான நிலையம் சென்ற இலங்கையின் ஆரம்ப தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் டாயா காமேஜை வழியணுப்பச் சென்ற போது இலங்கைத் தூதர் இப்ராகிம் தாக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரையில், கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் அரசியல் கட்சிகள் மாநாட்டில் முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவும் கலந்து கொண்டார்.
அவருக்கு எதிராக மலேசியாவிலுள்ள தமிழர்கள் நாடெங்கிலும் ஆங்காங்கே கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.