Home Featured நாடு 500 நூல்கள் வெளியீடு: உலக சாதனையை நோக்கி மலேசிய நூலாசிரியர்கள்!

500 நூல்கள் வெளியீடு: உலக சாதனையை நோக்கி மலேசிய நூலாசிரியர்கள்!

1060
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து உலக சாதனை முயற்சியில் இறங்கியுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 12,13 ஆகிய நாட்களில், 500 நூல்களை வெளியிட்டு புதிய சாதனையைப் படைக்கவுள்ளது.

Kumaran-UM-Sliderஇது குறித்து இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தனது 60 ஆண்டு (1956 – 2016) கல்விப் பணியினை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து “மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர்” நூலாக்கம் திட்டத்தினைத் தொடங்கியது. இத்திட்டத்தின்வழி கடந்தாண்டு 350நூல்கள்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்து சாதனை படைத்தது. அவற்றுள் 10 மலேசிய நூல்களும் அடங்கும்.”

#TamilSchoolmychoice

“இவ்வாண்டு புதிய சாதனையை ஏற்படுத்த 500 நூல்கள் வெளியீடு காணவுள்ளன. உலக சாதனை படைக்கவிருக்கும் இந்த நூல் வெளியீட்டு விழா 2016 செப்டம்பர் 12, 13 ஆகிய நாட்களில் அண்ணாமலைப் பலகலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. நூல் வெளியீட்டினையொட்டி கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் குறித்த கட்டுரைகளும் படைக்கப்படும்.”

“மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் யாவரெனில் தமிழ்மொழி, இலக்கியம், தமிழ்க் கல்வி, தமிழர் கலை, பண்பாடு, விளையாட்டு, தமிழர் இனமான உணர்வு, தமிழர் மேன்மை, சமூக பொருளாதார அரசியல் வழி தமிழர் மேம்பாட்டிற்கு உழைத்தல் என அனைத்துத் துறைகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி மறைந்த தமிழ்ப் பெருந்தகையோரும், தமிழ்ச் சமுதாயம் உய்ய தொடர்ந்து பணியாற்றி வரும் பெருந்தையோரும் அடங்குவர்.”

annamalai-university-550-1

(கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 350 நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி)

“சீர்மிகும் மலேசியத் திருநாட்டில் தமிழர்கள் மேன்மையுற உழைத்த, வழிகாட்டிய பெருந்தகையோர் அடையாளங்காணப்பட்டு ஆவணப்படுத்தப்படுத்துவதே நூல் எழுதும் திட்டத்தின் தலையாய நோக்கமாகும். தற்போதைய தலைமுறையும் அடுத்தத் தலைமுறையும் இவர்களை எண்ணிப்பார்க்கவேண்டும்; வாழ்வில் உதாரணமாகவும் கொள்ளவேண்டும். இவர்கள் இல்லாவிடில் மலேசியாவில் தமிழும் தமிழர்களும் வெற்றிபெற்றிருக்க இயலாது. உலகத்தாருக்கு மலேசியத் தமிழர்களை அடையளங்காட்டும் கடப்பாடு நமக்குண்டு.”

“ஒரே நேரத்தில் 80 நூல்கள் எழுதுவதென்பது மிகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொருவரையுங் குறித்து 100 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. எழுத்தப்படுவோர் குறித்த குறிப்புகளையும் படங்களையும் சேகரித்து சிறுசிறு தலைப்புகளிட்டு எழுதும் பணியில் 80 பேர் ஈடுபட்டனர்.”

“எழுதப்படுவோரின் பிறப்பு வளர்ப்பு, கல்வி, இலக்கியப் பணி, சமூக பணி, தமிழ் மற்றும் தமிழர் சிந்தனை, அவர்கள் முன்னெடுத்த திட்டங்கள், இன்னும் பிற அரிய பணிகளையும் தொகுத்து நூலாக எழுதினர். மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவேண்டிய மிகப்பெரிய பணியினை இவர்கள் செய்துமுடித்தனர்.”

“சாதனை நூல் வெளியீட்டு விழா கருத்தரங்கில் 420 தமிழக நூல்களுடன் 80 மலேசிய நூல்களும் வெளியிடப்படும். இவ்வெளியீட்டு விழாவில் மலேசிய நூலாசிரியர்கள் 60 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்” என முனைவர் எஸ்.குமரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.