கோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி, புக்கெட்டிலிருந்து பேங்காக் சென்ற ஏர்ஆசியா விமானத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக, ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னான்டசும், தாய் ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி தாசாபோன் பிஜ்லீவெல்டும் தமது விமானப் பணியாளர் ஒருவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
சம்பவத்தன்று அவ்விமானத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் பயணித்துள்ளார். அதில் ஒரு பிள்ளை ஆட்டிசம் குறைபாடு கொண்டது என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், அந்தப் பெண் விமானப் பணியாளர், குறைபாடு உள்ள அப்பிள்ளைக்கு என்ன உதவி செய்ய முடியும்? என்று தன்னிடம் உள்நோக்கத்துடன் கேட்டதாக அப்பயணி ஏர்ஆசியா நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
அதோடு, விமானத்தில் நடந்த இப்பிரச்சினையை சரி செய்ய அந்த விமானப் பணியாளர் அத்தாயிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
விமானப் பணியாளர் அந்நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஏர் ஆசியா தலைவர்கள், அப்பணியாளரையும், புகார் அளித்த தாயையும் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்திப்பார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.