கோலாலம்பூர் – டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகரசபையின் திட்ட நிர்வாகத்திற்கான நிர்வாக இயக்குநர் சைட் அஃபெண்டி அலி சைட் அபிட் அலி மீது நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்) 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
இவற்றில் 9 குற்றச்சாட்டுகள் ஊழல் தொடர்புடையவை. எஞ்சிய 9 குற்றச்சாட்டுகள் பண இருட்டடிப்பு (money-laundering) தொடர்புடையவையாகும். இவற்றில் சம்பந்தப்பட்டுள்ள மொத்த பணத்தின் மதிப்பு 4.4 மில்லியன் ரிங்கிட்டாகும்.
54 வயதான சைட் அஃபெண்டி அலி குற்றங்களை மறுத்து விசாரணை கோரினார்.
சைட் அஃபெண்டியின் வங்கிக் கணக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளும் இந்த வழக்கு தொடர்பில் முடக்கப்பட்டுள்ளன.
அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட்டுக்கான பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டு, அவரது அனைத்துலகக் கடப்பிதழும் முடக்கப்பட்டுள்ளது.
சைட் அஃபெண்டியின் மேல் முறையீட்டுக்கு ஏற்ப முதல் கட்டமாக 4 இலட்சம் ரிங்கிட் பிணைத் தொகையை செலுத்துவதற்கும், மீதி 6 இலட்சம் ரிங்கிட்டை எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் செலுத்துவதற்கும் நீதிபதி அனுமதி அளித்தார்.