கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அமெரிக்க வழக்கறிஞர் கிம்பர்லி மோட்லிக்கு எதிராக, வரும் அக்டோபர் 12-ம் தேதி, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்திற்கு வெளியே, பேரணி நடத்தப் போவதாக சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் மொகமட் யூனுஸ் அறிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை சுங்கை பூலோ சிறையில் அன்வாரைச் சந்தித்த கிம்பர்லி, அன்வாருக்குத் தவறாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் இன்னமும் குற்றமற்றவர் தான் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதோடு, இவ்வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அன்வாரின் விண்ணப்பத்திற்கு மலேசியர்கள் ஒன்று திரண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மோட்லி மலேசிய மக்களை தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜமால், அவர் மலேசிய சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும், “பைத்தியம் பிடித்த வழக்கறிஞராக” நடந்து கொள்ளக் கூடாது என்றும் ஜமால் தெரிவித்துள்ளார்.
“அன்வார் தனது முன்னாள் உதவியாளர் மொகமட் சைபுல் புகாரி அஸ்லானை ஓரினப்புணர்ச்சி செய்தார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர் (மோட்லி) அறிய வேண்டும்”
“எல்லோரும் கூறுவது போல் அன்வார் ஒரு அரசியல் கைதி அல்ல, மலேசியாவின் நீதித்துறை மற்றும் சட்ட முறைகள் குறித்துப் பேசவும், மக்களை தூண்டிவிடவும், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் பைத்தியக்கார வழக்கறிஞருக்கு உரிமை இல்லை” என்று ஜமால் தெரிவித்துள்ளார்.