அலோர்ஸ்டார் – பிரதமர் நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து நீக்கும் போராட்டமாக, கடந்த மார்ச் 4-ஆம் தேதி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடக்கி வைத்த பொதுமக்கள் பிரகடனத்தில் இதுவரை 1 மில்லியனுக்கும் கூடுதலான பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த பொதுமக்கள் பிரகடனத்தை கெடா சுல்தானும், தற்போதைய மாமன்னருமான சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் அவர்களைச் சந்தித்து மகாதீர் நேற்று வியாழக்கிழமை ஒப்படைத்தார்.
அலோர்ஸ்டாரிலுள்ள அரண்மனையில் மாமன்னருடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் மகாதீர் அந்தப் பிரகடனத்தை ஒப்படைத்தார். எனினும் மாமன்னருடனான சந்திப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நஜிப்பின் பதவி விலகல் மட்டுமின்றி அரசாங்கத்தின் முக்கியமான அதிகார மையங்களை மறு சீரமைக்கும் படியும் பொதுமக்கள் பிரகடனத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
மலேசிய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமைகள், கொள்கைகள் பேணப்படவும், பாதுகாக்கப்படவும் பொதுமக்கள் பிரகடனம் வலியுறுத்துகின்றது.