கோலாலம்பூர் – மலேசியர்களாகிய நாம் சில சமயங்களில் நமது பெருமை அயல் நாடுகளில் எவ்வளவு தூரம் மதிக்கப்படுகின்றது, அங்கீகரிக்கப்படுகின்றது என்பதை மறந்து விடுகின்றோம். 2016-ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ்கள் (பாஸ்போர்ட்) வரிசையில் 8-வது இடத்தைப் பிடித்திருக்கின்றது மலேசியக் கடப்பிதழ்.
சக்தி வாய்ந்த கடப்பிதழ் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது? அந்த கடப்பிதழை வைத்துக் கொண்டு எத்தனை நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்துத்தான்!
அந்த வகையில் உலகிலுள்ள 151 நாடுகளுக்கு நீங்கள் மலேசியக் கடப்பிதழ் மூலம் விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இதனால், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, மால்டா ஆகிய நாடுகளுக்கு இணையான தரத்தில் மலேசியா விளங்குகின்றது.
உலகின் அதிக சக்திவாய்ந்த கடப்பிதழ்களைக் கொண்டுள்ள நாடுகளாக ஜெர்மனியும், சுவீடனும் திகழ்கின்றன. இந்த நாடுகளின் கடப்பிதழ்களைக் கொண்டு 158 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம். நம்மை விட ஏழு நாடுகள் கூடுதல் – அவ்வளவுதான்!
இந்தத் தர வரிசையில் கடந்த ஆண்டு அமெரிக்கா முதலிடத்தையும், பிரிட்டன் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தன. ஆனால் இந்த ஆண்டுக்கான சக்தி வாய்ந்த கடப்பிதழ்கள் வரிசையில் பிரிட்டன் இரண்டாவது இடத்தையும் அமெரிக்கா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
நமது அண்டை நாடான சிங்கப்பூர் இந்த வரிசையில், அமெரிக்காவுடன் இணைந்து நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சிங்கப்பூர் கடப்பிதழ் மூலம் ஒருவர் 155 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
இந்த சக்திவாய்ந்த கடப்பிதழ்கள் வரிசையில் உள்நாட்டுப் போர்களால் பாதிப்படைந்துள்ள சிரியா, சோமாலியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கடைசியில் வருகின்றன. சுமார் 30-க்கும் குறைவான நாடுகளுக்கு மட்டுமே இந்த நாடுகளின் கடப்பிதழ்களைக் கொண்டு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.